சேலத்தில் தமிழ்நாடு சுகாதார பார்வையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட சுகாதாரப் பார்வையாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
இலவச மடிக்கணினி வழங்க வேண்டி சுகாதாரப் பார்வையாளர்கள் ஆர்ப்பாட்டம் - சேலத்தில் சுகாதாரப் பார்வையாளர்கள் ஆர்ப்பாட்டம்
சேலம்: சுகாதார பார்வையாளர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு சுகாதார பார்வையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வி, ”தமிழ்நாடு முழுவதும் இன்று சுகாதாரப் பார்வையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முத்துலட்சுமி ரெட்டி நினைவாக வழங்கப்படும் மகப்பேறு நிதி பணிகளை செயல்படுத்த, கூடுதல் பணியாளர்களை மாவட்டத்திற்கு ஒன்றும், வட்டாரத்திற்கு ஒன்றுமாக வழங்கிட வேண்டும். பதவி உயர்வை உரிய காலத்தில் வழங்க வேண்டும், சமுதாய நல செவிலியர்களுக்கு தகுதியின் அடிப்படையில் மாவட்ட தாய்சேய் நல அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும், நகராட்சியில் பணிபுரியும் சுகாதார செவிலியர் பணியினை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் சுகாதார பணியாளர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்ற முன்வரவேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் சென்னை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும்” என எச்சரிக்கை விடுத்தார்..