சேலம்:சேலம் மாநகராட்சி ஜாகீர் அம்மாபாளையத்தில் சிறிய அளவிலான அரியவகை நட்சத்திர ஆமை ஒன்றை பொதுமக்கள் கண்டுள்ளனர். இதுகுறித்து உடனடியாக தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற சேலம் தெற்கு, வன அலுவலர் சண்முகசுந்தரம் தலைமையிலான குழுவினர், நட்சத்திர ஆமையை பத்திரமாக மீட்டு குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் ஒப்படைந்தனர்.
சேலத்தில் கடல் ஆமையா?
சேலத்தில் மீட்கப்பட்ட நட்சத்திர ஆமை இது குறித்து வனத்துறை அலுவலர் கூறுகையில்,"கடல் பகுதியில் வாழும் நட்சத்திர ஆமைகள் மருத்துவக் குணம் கொண்டது. இதனால், வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்பனை ஆகிறது.
ஆனால், நட்சத்திர ஆமை சேலத்திற்கு வந்தது எப்படி? என சந்தேகம் எழுகிறது. சேலத்தில் நட்சத்திர ஆமை கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதா? அல்லது ஜாகீர் அம்மாபாளையம் அருகே உள்ள சூரமங்கலம் மீன் சந்தைக்கு வந்த கடல் மீன் பார்சலில் வந்ததா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'அமமுகவிலிருந்து அதிமுக' - எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தாவல்