அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தி நிர்வாகிகள்ஆலோசனைக் கூட்டம் இன்று சேலத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. அதிருப்தி நிர்வாகி புகழேந்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம்: ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்! - அமமுக அதிருப்தி நிர்வாகிகள் கூட்டம்
சேலம்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அதிருப்தி நிர்வாகி புகழேந்தி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
புகழேந்தி
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட ஏழு முக்கிய தீர்மானங்கள் கீழ்வருமாறு:
- எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் புகழுக்குப் புகழ் சேர்க்கும் வகையில் நடந்து முடிந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றியை ஈட்டித் தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கட்சி நிர்வாகிகள், வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
- அமமுகவை தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு முன்னரே பொதுச் செயலாளர் என்கிற பெயரில் அந்த அமைப்பை டிடிவி தினகரன் தான்தோன்றித்தனமாக நடத்தி வருவதையும் சுட்டிக் காட்டி விவரமான புகாரினை கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தி அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு விசாரணைக்காக அளித்துள்ளார். தேவையானால் மேற்படி அமைப்பிற்கு அங்கீகாரம் வழங்கக் கூடாது என வழக்கு மன்றத்திற்குச் செல்லவும் புகழேந்தி அவர்களுக்கு அங்கீகாரம் அளித்து இந்த நிர்வாகிகள் கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றினை வியாபார நோக்கத்துடன் திரைப்படமாக எடுப்பதற்கு, இக்கூட்டம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. எந்த ஒரு தனியார் நிறுவனமும் ஜெயலலிதா வரலாற்றை வியாபார நோக்குடன் திரைப்படமாக எடுக்க முற்பட்டால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவும் இந்த நிர்வாகிகள் கூட்டம் அனுமதி அளிக்கிறது.
- உலக பொதுமறை நூலாக 80க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலக மக்கள் அனைவரும் போற்றி வணங்கும் திருக்குறளை எழுதிய, உலகப் பெரும் புலவர் திருவள்ளுவர் இழிவு படுத்துவதும் அவருக்கு சமயச் சாயம் பூசுவதும் கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இந்த நிர்வாகிகள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
- ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து உயிர் நீத்த குழந்தை சுஜித்தின் ஆன்மா சாந்தி அடைய இந்த கூட்டம் பிரார்த்திக்கிறது. ஆழ்குழாய் கிணறு தோண்டிய நிறுவனம் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
- உள்ளாட்சித் தேர்தல் முடிந்ததும் டிடிவி தினகரன் அரசியல் அவதாரம் முடிவுக்கு வந்துவிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் காணாமல் போய்விடும் எனவே பதிவு பெறாத ஒரு சங்கத்தைப் போல் டிடிவி தினகரன் நடத்தி வரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற நிறுவனத்தை நம்பி இனி இளைஞர்களின் போக வேண்டாம் என இந்த கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
- எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட மாபெரும் இயக்கத்தையும் அம்மாவின் ஆட்சியையும் சீரோடும் சிறப்போடும் வெற்றிப்பாதையில் நடத்தி வருகிற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அனைவரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவது என இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.