தருமபுரி அடுத்த பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு அதிரடிப்படையினர் சந்தன கடத்தல் வீரப்பனை கடந்த 2004ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 18ஆம் தேதி சுட்டுக்கொன்றனர். வீரப்பன் உடல் மேட்டூர் அடுத்த மூலக்காட்டில், மேட்டூர் அணை கரையோரம், பொதுப்பணித்துறை நிலத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வீரப்பனின், 15ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது இதையொட்டி, வீரப்பன் சமாதி அருகே பந்தல் அமைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேட்டூர் மூலக்காட்டில் உள்ள அவரது சமாதிக்கு வீரப்பன் மனைவி முத்துலட்சுமி குடும்பத்துடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள், இளைஞர்கள், பாமகவினர் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர். தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் தன்னுடைய கட்சியினருடன் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், ”தமிழ்நாடு அரசு நயவஞ்சக முறையில் வீரப்பனை கொலை செய்தது. தற்போது வீரப்பனின் மறைவால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழ்நாட்டில் அதிமுக பாஜகவின் அடிமை ஆட்சியாக தான் நடைபெற்றுவருகிறது.
இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக இரண்டு இடைத்தேர்தல்களிலும் மக்கள் நல்ல முடிவு எடுப்பார்கள். அதிமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்” என்றார். இதைதொடர்ந்து தருமபுரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமாரும் வீரப்பன் சமாதிக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”வீரப்பன் பெயரை வைத்து அரசியல் நடத்திய பாமக, அவரது குடும்பத்தின் வாழ்வாதாரம் உயர எதுவும் செய்யவில்லை.
சந்தனக் கடத்தல் வீரப்பன் சமாதியில் வேல்முருகன் வீரப்பன் பெயரை வைத்து டிவி தொடர் எடுத்து, கோடி கணக்கில் சம்பாதித்தனர். எனினும் வீரப்பன் மனைவியை பாமகவில் உறுப்பினராக கூட முயற்சி எடுக்கவில்லை. இது வீரப்பன் குடும்பத்துக்கு செய்த மிகப்பெரிய துரோகம். வீரப்பனுக்கு மணி மண்டபம் கட்ட தேவையான உதவிகளை செய்வோம்” என்றார்.
இதையும் படிங்க: கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ரயில் இயக்காததை கண்டித்து போராட்டம்