சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் கிராமத்து பெண்களால் நடத்தப்பட்டு வருகிறது அழகப்பன் கிராமத்து ஹோட்டல். சுற்றுவட்டார மக்களுக்கு அமுதா அக்கா கடை அல்லது ராகி களி, கறிக் குழம்பு கடை என்றால் வெகு பிரசித்தம். 25 ரூபாய்க்கு ஒரு உருண்டை கேழ்வரகு களி, சுவைமிக்க நாட்டுக்கோழி குழம்பு அல்லது மட்டன் குழம்பு , குடல் குழம்பு, மீன் குழம்பு கிடைப்பது இந்தக் கடையின் சிறப்பம்சம்.
அசைவத்தின் உச்சபட்ச சுவையை ருசிக்க விரும்பும் அசைவ உணவு பிரியர்களுக்கு இந்த கிராமத்து உணவுக் கடை ஏற்றதொரு இடம் என்பது இங்கு அடிக்கடி சாப்பிடும் வாடிக்கையாளர்களின் கருத்து.
கிராமத்து உணவு தயாரிப்பின் நுட்பங்களை, இந்தக் கால இல்லத்தரசிகள் மறந்துவிட்ட சூழலில், தமிழர்களின் பாரம்பரியமான உணவை, முன்னோர்களின் நுட்பத்தில் கேழ்வரகு களி உருண்டை வாடிக்கையாளர்களின் கண்முன்னே தயாரிக்கப்பட்டு சுடச்சுட வாழை இலைகளில் பரிமாறுகிறார்கள் அழகப்பன் கடை ஊழியர்கள்.
அதுமட்டுமல்லமால், இங்கு பரிமாறப்படும் முட்டை பணியாரம், சாமைச் சோறு, கருவாட்டு குழம்பு, சைவ வகை குழம்புகளும் பிரமாதம் தான். வீட்டு முறையில் அன்றாடம் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களில் பக்குவமான முறையில் இந்த குழம்பு வகைகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்குப் பரிமாறப்படுகிறது.