சேலம்: தமிழ்நாட்டில் முதன்முதலாக பிரத்யேகமாக விமான ஓட்டுநர் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 1993 ஆம் ஆண்டு சேலத்தில் தொடங்கப்பட்ட சேலம் விமான நிலையம் போதிய பயணிகள் வரத்து குறைவால் தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு மீண்டும் பயணிகள் சேவையைத் தொடங்கிய சேலம் விமான நிலையம், தற்போது மேலும் சிறப்புப் பெருமையை பெற்றுள்ளது.
அதாவது விமானி அல்லது விமான ஓட்டுநர் உரிமம் பெற வேண்டுமென்றால், நிறைய பணம் செலவாகும். இதனை எளிமையாக்கும் வகையில் தமிழ்நாட்டில் முதன்முதலாக பிரத்யேகமாக விமான ஓட்டுநர் பயிற்சிக்கு மையம் தொடங்கப்பட்டுள்ளது. பல எழை எளிய, நடுத்தர மாணவர்கள், விமானி ஆக வேண்டுமென்ற கனவோடு இருப்பவர்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்பாக அமையும் என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் சேலம் விமான நிலைய இயக்குநர் வி. கெ. ரவீந்திர ஷர்மா.
தொடர்ந்து பேசிய அவர், சேலம், பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட நகரங்களுக்கிடையே விமான சேவை தொடங்குவது குறித்தும், விமான நிலைய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறினார். இதுகுறித்து விரைவில் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்தார்.
விமான போக்குவரத்திற்கான கட்டணம் தமிழ்நாட்டில் சேலத்தில் மட்டும் மிகக்குறைவு என்றும் தெரிவித்தார். குறிப்பாக, விமான நிலையங்களில் வேலை வாங்கி தருவதாக போலியான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கூறியதை நம்பி, பல இளைஞர்கள் பணத்தை இழந்த பின்னர் தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து தெரிந்து கொள்கின்றனர். பணம் இழந்தது குறித்து கண்ணீர் மல்க தங்களுக்குத் தகவல் தெரிவிக்கின்றனர் என்றும், இது குறித்து மாணவர்களும், வேலை தேடுபவர்களும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நேரடியான அல்லது மறைமுகமான வேலைவாய்ப்பை தாங்கள் வழங்குவதில்லை எனவும், வேலைவாய்ப்பு குறித்த தகவல்கள் தங்களுக்கான பிரத்யேக இந்திய விமான நிலையங்களின் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும், அதை மட்டுமே கருத்தில்கொள்ள வேண்டும் எனவும் தகவலைப் பகிர்ந்தார்.