சேலம்: சேலம் நகரில் ராஜகணபதி கோயில் அருகே உள்ள லலிதா மற்றும் அவரது கணவர் தங்கராஜ் ஆகியோருக்கு சொந்தமான லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் சார்பில் தங்களிடம் நகை மற்றும் பணத்தை டெபாசிட் செய்தால் ஒரு பவுன் தங்கத்திற்கு மாதம் 600 ரூபாய் வட்டி வீதமும், ஒரு லட்சம் பணத்திற்கு மாதம் 2500 ரூபாய் வீதம் வட்டி வழங்கப்படும் என அறிவித்து, பலரிடம் கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை வாங்கியுள்ளார்.
இந்த நிலையில் சில மாதங்களாக அனைவருக்கும் உரிய வட்டி தொகையைக் கொடுத்து வந்த நகைக்கடை நிர்வாகம், திடீரென கடந்த 3 மாதங்களாக உரியத் தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணத்தைக் கேட்டு வந்த நிலையில் நகைக் கடையை காலி செய்துவிட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்டவர்கள் பொன்னம்மாபேட்டை அருகே சக்தி நகரிலுள்ள தலைமறைவானவரின் உறவினர் வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவம் குறித்துத் தகவலறிந்த சேலம் டவுன் மற்றும் அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளைச் சுருட்டிய தம்பதியினரைத் தேடி வருகின்றனர்.