சேலம்: அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜிநாதன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அதில், அரசு தலைமை பொது மருத்துவமனை கரோனா சிறப்புப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த, நோயாளிகளில் மூன்று பேர் குணமடைந்து தங்கள் வீடு திரும்பினர். அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மருந்து, மாத்திரைகள் மற்றும் உணவுப் பொருட்களை வழங்கி, அரசு பொது மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதன் வழியனுப்பி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்தப் பேட்டியில், "சேலம் மாவட்டம் கரோனா தொற்றில் பூஜ்ய விழுக்காடாக உள்ளது. கரோனா நோய்த்தொற்றை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், காவலர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள் என 2,500 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் தொற்று இருப்பதாகக் கண்டறியப்படவில்லை.
இந்திய அளவில் அதிக ஆபத்து உள்ள மாநிலங்களாக விளங்கும் மகாராஷ்டிரா, குஜராத் பகுதிகளிலிருந்தும், சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் சேலத்திற்கு விமானம், ரயில் அனுமதிக்கப்படும். பேருந்துகள் மூலமாக வருகை தரும் நபர்களுக்கு மாவட்ட எல்லைப் பகுதியில் சளி பரிசோதனை செய்யப்படுகிறது.
அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் பாலாஜிநாதன் பேட்டி அவர்களுக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டால், உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் 69 நபர்கள் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசு மருத்துவமனையில் செயற்கை சுவாசக் கருவிகளின் பற்றாக்குறை ஏதுமில்லை. ஆயிரம் நோயாளிகளுக்கு மேல் இருந்தாலும்; அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கக்கூடிய வகையில் சேலம் மருத்துவமனையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோல கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்தால், 6 மணி நேரத்தில் முடிவு தெரியும் வகையில் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள பரிசோதனைக் கூடம் மேம்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.