சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயிகளான ரவி, செல்வராஜ். இவர்கள் இருவரும் பேலஸ்நகர் கூட்டுறவு வீடு கட்டும் கடன் சங்கத்திடம், நிலப்பத்திரத்தை அடமானமாக வைத்து, தலா இரண்டரை லட்சமும், நான்கு லட்சமும் கடன் பெற்றிருந்தனர். இக்கடன் தொகையைக் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே வட்டியுடன் சேர்த்து திரும்பச் செலுத்தியதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் நிலப்பத்திரத்தை சங்க அலுவலர்கள் தங்களிடம் இதுவரை திரும்ப ஒப்படைக்கவில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் தற்கொலை முயற்சி! - கூட்டுறவு சங்கம்
சேலம்: வீடு கட்டும் சங்க அலுவலகம் முன்பு, கடன் பெற்றவர்கள் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இதுதொடர்பாக விசாரித்து நிலப்பத்திரத்தைத் திரும்பி வாங்கிச்செல்ல, கூட்டுறவுச் சங்கத்திற்கு வந்த ரவி, செல்வராஜ் இருவரும் அலுவலர்கள் தங்களை அலைக்கழிப்பதாகக் கூறி, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். பின்னர், தகவலறிந்து வந்த சேலம் நகர காவல்துறையினர் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி, அவர்களை மீட்டு விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்துள்ளப் பேட்டியில், ‘கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் வீடு கட்டுவதற்காக நிலத்தின் பத்திரத்தை அடமானம் வைத்துப் பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பி செலுத்திய பிறகும், அடமானமாக பெற்றுக்கொள்ளப்பட்ட பத்திரத்தைத் திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி அலுவலர்கள் எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். இதனால், தினசரி சங்கத்திற்கு வந்து செல்லும் செலவு அதிகரிப்பதால் பொருளாதார சிரமமும் ஏற்படுகிறது. எனவே, அலுவலர்கள் பத்திரத்தைத் திருப்பி கொடுத்து உதவ வேண்டும்’ என்று கூறினர்.