சேலத்தின் பிரதான சுற்றுலா தலமாக விளங்கும் ஏற்காட்டிற்கு அடுத்த நிலையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடந்த ஒரு வருடமாக தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்து சங்கம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சில வாரங்களுக்கு முன்பு தொடர்ச்சியாக 10 நாட்கள் சுற்றுலா தினம் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் சேலத்தில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சுற்றுலா துறையில் மருத்துவ சுற்றுலாவை இணைத்து, சுற்றுலா பயணிகளுக்கு பயன்தரும் வகையில் திட்டமிட்டு தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்து சங்கம் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து சேலத்திற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் வகையில் சேலம் மாவட்ட சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வழிகளை விளக்கும் வரைபடம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்ட சுற்றுலா தலங்கள் குறித்த வரைபடம் வெளியீடு இதன் மூலம் சேலம் மாவட்டத்தின் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை வெளிக்கொண்டுவருவது தங்களுடைய நோக்கம் என்றும் தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்து விருந்தோம்பல் சங்கத்தின் சேலம் பிரிவு இயக்குநர் சிவராஜ் கல்பனா தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற இந்த விழாவில், சேலம் அரசு தலைமை மருத்துவமனையின் முதல்வர் மருத்துவர் தனபால் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.