சேலம்: சீலநாயக்கன்பட்டி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "இந்தியாவை ஒற்றை சிந்தனையில் தள்ளும் முயற்சி ஏற்புடையதல்ல. ஒற்றை சிந்தனை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. தமிழ் கலாசாரம், மொழி மீது முழுமையான தாக்குதலை சந்தித்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் மீதான தாக்குதலை நான் ஒட்டு மொத்த இந்தியா மீதான தாக்குதலாக பார்க்கிறேன்.
அதிமுகவின் முககவசம்.. ஆர்எஸ்எஸின் முகம்..
திராவிட கழக தலைவர், வீரமணி பேசும் போது, கரோனா நேரத்தில் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற சிறந்த கருத்தை சொன்னார். முககவசம் அணிவதால் ஒருவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. இப்போது தமிழ்நாட்டில் இருப்பது பழைய அதிமுக இல்லை; அதிமுக முககவசம் அணிந்துள்ளது. அதிமுகவின் முககவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜகவின் முகமே தெரியும். பழைய அதிமுக இறந்து விட்டது. இப்போது இருப்பது பாஜக இயக்கும் ஒரு அமைப்பாக உள்ளது.