தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

8 வழிச்சாலை தீர்ப்பு: மக்களின் கருத்து என்ன? - சேலம்

சேலம்: எட்டு வழி சாலை திட்டம் தொடர்பான தமிழக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்து வழங்கியுள்ள தீர்ப்புக்கு பொதுமக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

salem

By

Published : Apr 8, 2019, 4:24 PM IST

சேலத்திலிருந்து சென்னைக்கு பசுமை வழி திட்டம் என்ற பெயரில் 8 வழி சாலை அமைக்க மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்த நிலம் கையகப்படுத்தி இருந்தது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. எட்டு வழிச்சாலை அமைய உள்ள அயோத்தியாபட்டினம், ராமலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். அவர்கள் மீது காவல்துறையும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து போராட்டங்களை ஒடுக்கியது. ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிய நிலையில், தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தையும் சேலம் மாவட்ட விவசாயிகள் அறிவித்திருந்தனர். மேலும், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக மற்றும் விவசாய அமைப்பினர் வழக்கு தொடர்ந்து 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரி மனு அளித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று 8 வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருந்த அரசாணையை ரத்து செய்து தீர்ப்பளித்தது. தீர்ப்பு குறித்து தகவலறிந்த அயோத்தியாபட்டினம் - ராமலிங்கபுரம் 8 வழிச்சாலை எதிர்ப்பு கூட்டமைப்பைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தியும் சாலை அமைப்பதற்காக நடப்பட்டிருந்த எல்லைக் கற்களை பிடுங்கி எறிந்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

பொதுமக்கள் கருத்து

இது தொடர்பாக நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய விவசாய அமைப்பின் பிரதிநிதி சிவகாமி,"எங்களின் ஓயாத போராட்டத்திற்கு நீதிமன்றம் அங்கீகாரம் கொடுத்து திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பை வழங்கி எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. தேர்தல் முடிந்த பிறகும் கூட இதே திட்டத்திற்காக தமிழக அரசும் மத்திய அரசும் செயல்பட்டாலும் எங்களது எதிர்ப்பு போராட்டம் தொடரும். மேலும், முழுமையாக இந்த திட்டம் ரத்து செய்யப்படும் வரையில் நாங்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்" என்று தெரிவித்தார்.

பாமக கொண்டாட்டம்

அதேபோல், அயோத்தியபட்டினம் பகுதியைச் சேர்ந்த பாமகவினர், இந்த தீர்ப்புக்கு ஆதரவாக பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியைக் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details