சேலம்: தேக்கம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 10ஆவது வார்டு உறுப்பினர் சாந்தா என்பவரின் கணவர் கோவிந்தன், கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், 'தேக்கம்பட்டி பஞ்சாயத்து நிர்வாகத்தில், சாக்கடை கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்காக ரோடு முழுவதும் குழி தோண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், அப்பகுதியில் ஜெயராமன் என்பவருக்குச்சொந்தமான கடை முன்பு பஞ்சாயத்து நிர்வாகம் ஆணைப்படி குழி தோண்டப்பட்டது.
இதில், ஜெயராமன் பணியில் ஈடுபட்ட எங்களிடம் தகராறில் ஈடுபட்டார். தகராறில் ஜெயராமன், எங்களை சாதிப் பெயர் குறிப்பிட்டு திட்டியதோடு மட்டுமில்லாமல், 40 ஆண்டுகளாக எந்த தலைவரும் கால்வாய் போடாத நிலையில் இந்த தலைவர் மட்டும் போட்டுவிட முடியுமா என்று தேக்கம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுதா என்பவரையும் சாதிப்பெயரை குறிப்பிட்டும், அவதூறாகப்பேசினார்' என்று புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, கருப்பூர் காவல் நிலையத்தில், எஸ்.சி. எஸ்.டி.பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஜெயராமனை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க:காலாண்டு விடுமுறையினையொட்டி உதகையில் குவியும் சுற்றுலாப்பயணிகள்... ஏற்பட்டது போக்குவரத்து நெரிசல்