சேலம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சாக்கடைகளை முறையாக சுத்தம்செய்து, கொசுக்களை ஒழிக்க வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் கொசு வலைகளை அணிந்தபடி இன்று (செப்.5) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மாநகரப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாக்கடைகள் தூர்வாரப்படாததால் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி கொசு தொல்லை அதிகரித்துக்காணப்படுகிறது. அத்துடன் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக, ஆங்காங்கே மழைநீருடன் சாக்கடையும் கலந்து, மேலும் உற்பத்தியாகிய கொசுக்களினால் பொதுமக்கள் டெங்கு உள்ளிட்ட பலதரப்பட்ட வைரஸ் காய்ச்சல் தொற்றுகளுக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளனர்.
இதனைத்தவிர்க்க மாநகராட்சி நிர்வாகம் ஆங்காங்கே தேக்கமடைந்த சாக்கடை நீர், மழைநீர் உள்ளிட்டவற்றை முறையாக அப்புறப்படுத்தி பொதுமக்களை நோய்ப்பாதிப்புகளிலிருந்து காக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.