தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம் அரசு மருத்துவமனைக்கு ரூ. 1.14 கோடி மதிப்பீட்டில் அதிநவீன பிராணவாயு கலன்!

சேலம்: அரசு மருத்துவமனையில் ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன பிராணவாயு கலனை முதலமைச்சர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

அதிநவீன பிராணவாயு கலன்
அதிநவீன பிராணவாயு கலன்

By

Published : Nov 4, 2020, 3:46 PM IST

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன பிராணவாயு கலனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் இன்று (நவம்பர் 4) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராமன், மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், சேலம் தெற்கு சட்டப்பேரவை உறுப்பினர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆட்சியர் ராமன், கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் அவசர தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தங்கு தடையின்றி நோயாளிகளுக்கு வழங்க ஏதுவாக அதன் கொள்ளளவு உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

வைரஸ் தொற்றுக்கு முன்பு இருந்த ஆக்சிஜன் கொள்ளளவை விட தற்போது பன் மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாக கூறிய அவர், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏற்கனவே இருந்த 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கலனுக்கு பதிலாக, தற்போது 35 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட அதிநவீன சிறந்த பிராணவாயு கலன் நிறுவப்பட்டுள்ளது என்றார்.

oxygen-cylinder-service

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு மருத்துவமனை முதல்வர் பாலாஜி நாதன், இந்த புதிய பிரமாண்ட பிராணவாயு கலன் ஒரு வாரத்துக்குள் நோயாளிகளின் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும், தற்போது மருத்துவமனையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் சோதனை முறையில் பிராணவாயு அனுப்பப்படுகிறது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், குழந்தைகள் சிகிச்சை வார்டு, மகப்பேறு வார்டு, கரோனா சிறப்பு சிகிச்சை மையம் ஆகியவற்றில் உள்ள நோயாளிகளுக்கு இந்த பிராணவாயு கலன் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details