தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

திமுக பிரமுகர் விடுத்த வெடிகுண்டு மிரட்டல்; கதிகலங்கிய காவல்துறையினர்..! - சேலம்

சேலம்: சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் வெடிகுண்டு உள்ளதென மிரட்டல் விடுத்து, ஓமலூரில் தலைமறைவான திமுக பிரமுகர் அருண்ராஜ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பிரமுகர் அருண்ராஜ்

By

Published : Aug 10, 2019, 8:39 PM IST

டெல்லி காவல்நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், சென்னையிலிருந்து வரும் விமானத்தில், யாசின் என்ற பெண் வெடிகுண்டுடன் வருகிறார். குறிப்பிட்ட நேரத்தில், அது வெடிக்கும் எனக்கூறி தொடர்பைத் துண்டித்துள்ளார்.

இதையடுத்து, டெல்லி விமான நிலைய பாதுகாப்பு அலுவலர்கள் எச்சரிக்கையுடன் இருந்தனர். இதனைத் தொடர்ந்து, எந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அது தமிழ்நாட்டு எண் என தெரியவந்ததும், சென்னைக்கு தகவல் தெரிவித்து உளவுப் பிரிவு காவல்துறையினர் மூலம் அடையாளம் தெரியாத அந்த நபர் குறித்து விசாரிக்க அறிவுறுத்தப்பட்டது.

சேலம் மாவட்ட முகவரியில் இருந்து அழைப்பு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சேலம் காவல்துறையினருக்கு இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. அவர்கள் விசாரித்ததில், ஓமலூர் காமராஜர் நகரில் வசிக்கும் அண்ணாதுரை மகன் அருண்ராஜ் (27) என தெரியவந்தது.

டிப்ளமோ படிப்பைப் பாதியில் நிறுத்திய அவர், இணையதளம் மூலம் ஜிபிஎஸ் கருவி பயன்பாட்டுக்கு கணினியில் வரைபடம் தயாரித்து பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கி வந்துள்ளார். அதேபோல, ஓமலூர் பேரூர் திமுக இளைஞர் அணி அமைப்பாளராகவும் பணி செய்து வந்துள்ளது தெரியவந்தது.

ஓமலூர் காவல்துறையினர் நேற்று அருண்ராஜை தேடி வீட்டுக்குச் சென்றபோது, அவர் அங்கு இல்லை. கைப்பேசி எண்ணும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவரது தாய் சித்ரா, சகோதரர் மோகன்ராஜ் ஆகியோரிடமும் காவல்துறையினர் தீவிரமாக விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே அருண்ராஜ் மேச்சேரியில் உள்ள அவரின் உறவினர் வீட்டில் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அருண்ராஜை காவல்துறையினர் கைது செய்து, ஓமலூர் அழைத்துவந்தனர். அருண்ராஜ் கைது செய்யப்பட்டது குறித்து காவல்துறை உயர் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அருண்ராஜிடம் ஓமலூர் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தாரமங்கலம், தீவட்டிப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் வைத்து, அருண்ராஜிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details