சேலம்: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து சேலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருள்களை புறக்கணிக்க வலியுறுத்தி ரிலையன்ஸ் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு போராடிய பல்வேறு கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கைது செய்யப்பட்டனர்.
புதிய வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டெல்லியில் கடந்த 17 நாட்களாக விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ரிலையன்ஸ் வணிக வளாகத்தை முற்றுகையிட்டோர் கைது இந்த நிலையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டத்தை உடனே மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தியும், கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருள்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரிகள் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான போராட்டத்தை இன்று(டிச.14) நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சேலம் ஐந்து ரோடு பகுதியில் அமைந்துள்ள ரிலையன்ஸ் வணிக வளாகத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு உள்ளே நுழைந்து போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சேலம் மாநகர் கமிட்டி செயலாளர் பிரவீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி மாநில செயலாளர் இமயவரம்பன், காஜா மைதீன், சாமுராய் குரு, வசந்த் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஓமலூர் சுங்கச்சாவடி பகுதி போன்ற இடங்களில் போராட்டம் செய்தவர்களும் கைது செய்யப்பட்டனர். அருகில் புதிய வேளாண் சட்டம், மின்சார திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: உ.பி.யில் பாலியல் வன்கொடுமை: ராணுவ கர்னல் மீது வழக்குப்பதிவு