சேலம்:இது குறித்து இன்று (டிசம்பர் 10) சேலத்தில் செய்தியாளரைச் சந்தித்த கே.என். நேரு கூறுகையில், "சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை நடைபெறுகிறது. வேறு எங்கும் இல்லாத வகையில் ஒரே இடத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதனையடுத்து 261 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மேலும் 12 அரசுத் துறைகள் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 38.52 கோடி ரூபாய் மதிப்பிலான 83 திட்டப்பணிகளை முதலமைச்சர் திறந்துவைக்கிறார்.ஆறு அரசுத் துறைகள் சார்பில் 54 கோடி ரூபாய் மதிப்பிலான 60 பணிகளுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டவுள்ளார்.
கே.என். நேரு சேலத்தில் செய்தியாளர் சந்திப்பு சேலம் மாவட்டத்தில் வட்டச் சாலை (ரிங் ரோடு) அமைப்பது, ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா, தொழில்நுட்பப் பூங்கா செயல்பாடுகள், பனமரத்துப்பட்டி ஏரி சீரமைப்பு உள்ளிட்ட பொதுமக்களின் முக்கியக் கோரிக்கைகள் குறித்து ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்பட உள்ளது. உடனடியாக நிறைவேற்ற வாய்ப்புள்ள திட்டங்கள் குறித்தும் சேலத்திற்குப் புதிய திட்டங்கள் தொடர்பாகவும் ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிடுவார்" என்று தெரிவித்தார்.
முன்னதாக விழா முன்னேற்பாடு பணிகளை கே.என். நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் கார்மேகம், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ், மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட திமுக பொறுப்பாளர்கள் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். சிவலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தேசியவாதிகளை கைதுசெய்யும் அறிவாலய அரசு - அண்ணாமலை கடும் கண்டனம்