தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வீட்டின் தவணைத் தொகையை செலுத்தாமல் 23 ஆண்டுகள் வசித்த அரசு ஊழியரை வெளியேற்ற உத்தரவு - government employee to vacate rented house

உரிய நடைமுறைகளை பின்பற்றி ராஜேந்திரனை வெளியேற்றவும், நிலுவைத்தொகையை வசூலிக்கவும் வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக இணைத்ததுடன், இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் ஆணையிட்டுள்ளார்.

Madras HC
Madras HC

By

Published : Dec 8, 2021, 12:56 PM IST

சென்னை : ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டிற்கான தவணைத் தொகையை செலுத்தாமல் 23 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு ஊழியரை வெளியேற்ற வீட்டுவசதி வாரியத்திற்கும், அனுமதியில்லாமல் கட்டப்பட்ட இரண்டு மாடிகள் மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாநகராட்சிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அன்னதானப் பட்டியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் அரசு ஊழியரான ஆர்.ராஜேந்திரன் என்பவர் 1988இல் ரூ.5 லட்சத்து 99 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்புள்ள வீட்டை, ரூ.2 லட்சத்து 39 ஆயிரத்து 800 ரூபாய் முன்பணமாக செலுத்திய நிலையில், மீதமுள்ள தொகையை 10 வருடங்களில் செலுத்த வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டு அதில் 23 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.

மாதத் தவணையான ரூ.3 ஆயிரத்து 547 தொகையை முறையாக செலுத்தாததால், 71 ஆயிரத்து 660 ரூபாய் நிலுவைத் தொகை சேர்ந்துள்ளதாகவும், வீடு ஒதுக்கீடு 2002ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டுவிட்டதால், தற்போதைய நிலையில் 55 லட்சத்து 10 ஆயிரத்து 510 ரூபாயை செலுத்த வேண்டும் என 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து விட்டு தனது பெயரில் வீட்டை கிரயம் செய்து தர வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தபோது, வீட்டை தன்னிடம் ஒப்படைக்கும்போது சில குறைபாடுகள் இருந்ததாகவும், அதற்காக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

வீட்டுவசதி வாரியம் தரப்பில், ராஜேந்திரனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டிற்கான தவணை தொகையை முழுமையாக செலுத்தாதது மட்டுமல்லாமல், உரிய அமைப்புகளிடம் அனுமதி பெறாமல் மேலும் இரண்டு மாடிகளைக் அவர் கட்டியுள்ளதாகவும், அதன் அடிப்படையில் உரிய நோட்டீஸ் அனுப்பப்பட்ட பிறகே நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இவற்றை பதிவுசெய்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், அரசு ஊழியராக இருந்து கொண்டு வீட்டுக்கான தவணைத் தொகையை முழுமையாக செலுத்தாமல், 23 ஆண்டுகளாக வசித்துவருவதை ஏற்க முடியாது என கூறி, நிலுவைத்தொகையை வசூலிக்கும் நடவடிக்கைகளை ரத்து செய்யக்கோரிய ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், உரிய நடைமுறைகளை பின்பற்றி ராஜேந்திரனை வெளியேற்றவும், நிலுவைத்தொகையை வசூலிக்கவும் வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் சேலம் மாநகராட்சி ஆணையரை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக இணைத்ததுடன், இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய வேண்டுமென உத்ததவிட்டுள்ளார்.

விதிமீறல் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை இடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை நான்கு வாரங்களில் எடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்

ABOUT THE AUTHOR

...view details