சேலம்:திமுக பிரமுகர் மகனிடமிருந்து தனது விவசாய நிலத்தை மீட்டுத்தரக் கோரி விவசாயி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
சேலம் அம்மாபேட்டை உடையார் காலனியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவருக்குச் சொந்தமான நான்கு ஏக்கர் விவசாய நிலம் பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ளது. இச்சூழலில், இவரின் மனைவியின் மருத்துவச் செலவிற்காகவும், பிள்ளைகளின் கல்விச் செலவுக்காகவும் பணம் தேவைப்பட்டதால், அவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தின் ஆவணங்களை அடைமானம் வைத்து, சேலம் கன்னங்குறிச்சியைச் சேர்ந்த திமுக பிரமுகர் கதிரவனின் மகன் திருநாவுக்கரசு என்பவரிடம் 16 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.
அந்தக் கடன் தொகைக்கு ஒரு ரூபாய் வட்டி வீதம் மொத்தம் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை, பார்த்தசாரதி திருப்பி செலுத்தி இருக்கிறார். ஆனால், முழுப் பணத்தை கொடுத்தும், நிலத்தை திருப்பித்தர மறுத்துள்ளார் திருநாவுக்கரசு.
இது தொடர்பாக திருநாவுகரசிடம் கேள்வி கேட்ட பார்த்தசாரதியை அடியாள்கள் வைத்து கொலைமிரட்டல் விடுத்து, அடித்து விரட்டியுள்ளார். இதனையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த பார்த்தசாரதி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எங்களுடைய பூர்விக விவசாய நிலத்தை அபகரித்து, தனது பெயருக்கு திமுக பிரமுகரின் மகன் மாற்றிக்கொண்டு அக்கிரமம் செய்துவருகிறார்.
வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்திய பிறகும், நில அபகரிப்பில் ஈடுபட்டுள்ள திமுக பிரமுகர் கதிரவன், அவரின் மகன் திருநாவுக்கரசும் இப்படி நடந்துகொள்கின்றனர்.
4 ஏக்கர் நிலம் அபகரிப்பு - திமுக பிரமுகர் மகன் மீது பரபரப்பு புகார் மேலும், எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் கொலைமிரட்டல் விடுத்துவருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர், எனது நிலத்தை எனக்கே திருப்பி அளிக்க நடவடிக்கை எடுத்து, உயிருக்குப் பாதுகாப்பு வழங்கிட வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து அருகிலிருந்த காந்தி சிலை முன்பு தர்ணாவில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.