தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய தரவு சேகரிக்கும் பணிகள், இணையப்பதிவேற்றம் குறித்து மே 18ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தலைமையில் துறை அலுவலர்களுடன் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் சேகர் பாபு, தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் சொத்துகள் குறித்த ஆவணங்கள் வெளிப்படையாக இணையதளத்தில் பதிவு செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இதுதொடர்பாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ட்வீட் செய்துள்ளார். அதில், "அறநிலையத்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டுகள். சரியான திசையில் எடுக்கப்பட்டுள்ள வரலாற்று நடவடிக்கை இது. மக்களின் வேண்டுகோளை ஏற்று துரித நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டுகள். வெளிப்படைத் தன்மைதான் நல்லாட்சிக்கான முதல்படி. நல்வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு ஆகியோரை டேக் செய்துள்ளார்.
முன்னதாக ஜக்கி வாசுதேவ், ‘கோவில் அடிமை நிறுத்து’ என்ற இயக்கத்தின் மூலம் கோயில் நிர்வாக கட்டுப்பாடுகளிலிருந்து அரசு வெளியேற வேண்டும், கோயில்கள் பராமரிப்பைப் பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும், அறநிலையத் துறையின் வரவு, செலவுக் கணக்குகளை வெளித் தணிக்கை செய்ய வேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலங்களை மீட்க வேண்டும், கோயில்களுக்குச் சொந்தமான கட்டடங்கள், நிலங்களுக்கு தற்போதைய சந்தை நிலவரத்திற்கு ஏற்ப வாடகை நிர்ணயித்து, அதை வசூலிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.