சேலம்: சாதிய ஒடுக்கு முறைகள் மீதான சேலம் மாவட்ட நிர்வாகத்தின் தலையீடுகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக, பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்டோர் கருத்தறியும் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், வழக்கறிஞர்கள் ப.பா.மோகன் லூசியா, ஸ்னேகா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சாதிய ஒடுக்குமுறைகளைத் தடுக்க தனி சட்டம்
சாதிய ஒடுக்குமுறைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே நடக்கும், ஆணவப் படுகொலைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் சமூக செயற்பாட்டாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கூலி உயர்வு கேட்டதற்கு திருட்டு வழக்கு
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, சாதிய தாக்குதலுக்கு உள்ளானவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். குறிப்பாக, ஓமலூர் அருகே உள்ள கே. மோரூர் பகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியினை ஏற்றுவதற்கு ஏற்பட்ட பிரச்சினை, ஆத்தூர் பகுதியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயிலில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
பட்டியலின சமூகத்தினருக்கு முடி வெட்டுதலில் ஏற்பட்டத் தகராறில் கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் சம்பவம் மற்றும் கூலித் தொகையை கேட்டதற்கு நகை திருடியதாக பொய்யான வழக்குக் கொடுக்கப்பட்டு, காவல் துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் நடந்த உண்மைச் சம்பவத்தை விளக்கினர்.