சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் ஆகஸ்ட் 17ஆம் தேதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதில் மருத்துவர்கள், நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்தும் அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வருடாந்திர ஆய்வு மேற்கொள்வதற்காக சேலத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். சேலம் அரசு மருத்துவமனையில் புற நோயாளிகள் சிகிச்சைக்காக தனிப்பிரிவு அமைக்கப்படும் எனவும் மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பின் விரைந்து பூர்த்தி செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஆய்வில் ஈடுபட்ட தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் கடந்த ஆண்டைவிட நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறைந்துள்ளதாகவும், 2000 சிகிச்சை மையங்களில் காய்ச்சல் பாதிப்பு குறித்து தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலர் பீலா ராஜேஷ் மேலும், அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை காலங்களில் ஏற்படும் காய்ச்சல் பாதிப்புகளை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவத் துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.