சேலம்:மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி எட்டியது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் நீர் முழுமையாக அப்படியே காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 28 ஆயிரம் கன அடி நீர் அளவு தொடங்கி 55 ஆயிரம் கன அடி வரை நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. அதன்பின்னர் நீரின் அளவு குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக நீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து இன்று காலை 65 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு காலை 6.30 மணிக்கு 65 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இந்த அளவு காலை 8 மணி முதல் 85 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையிலிருந்து 85 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.