கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முன்தினம், விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக இருந்த மேட்டூர் அணைக்கான நீர்வரத்து, நேற்று மாலை 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதையடுத்து நேற்று காலை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அணை முழுமையாக நிரம்பியுள்ளதால், 39 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து சுரங்க மின்நிலையம் வழியாக விநாடிக்கு 22,500 கனஅடியும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக, விநாடிக்கு 16,500 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து அணையின் நீர்மட்டம் 120.20 அடியாகவும், நீர் இருப்பு 93.79 டிஎம்சியாகவும் உயர்ந்தது.