சேலம்:அன்னதானப்பட்டி கேட்டுக்காடு பகுதியில் வீட்டில் ஏராளமான எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அன்னதானப்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வீட்டின் உரிமையாளர்களான மாணிக்கம் மற்றும் அவரது மகன் சங்கர் ஆகியோரிடம் அன்னதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டில் சோதனை நடத்தியதில் ஏராளமான எரிவாயு சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து காவல்துறையினர் சார்பில் சேலம் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ரேணுகா தேவி தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை நடத்தினர்.
இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய விசாரணையில், பிரபல நிறுவனங்களைச் சேர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் மற்றும் காலி சிலிண்டர்களை மாணிக்கம் மற்றும் அவரது மகன் சங்கர் பதுக்கி வைத்து கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது.