சேலம் - செங்கப்பள்ளி இடையிலான 100 கிலோமீட்டர் தேசிய நெடுஞ்சாலைக்கு 2009ஆம் ஆண்டு சேலம், கொண்டலாம்பட்டி, ஜாரி கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
10 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இதுவரை விவசாய நிலத்திற்கு தனி பட்டா வழங்காமல், அலுவலர்கள் காலம் தாழ்த்தி வருவதால், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில், விவசாய நிலத்திற்கு தனி பட்டா வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநில தலைவர், தங்கராஜ் கூறுகையில், "தேசிய நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப்படுத்தி தற்போது சாலை அமைத்து 10 ஆண்டுகள் கடந்த நிலையில் மீதமுள்ள நிலத்திற்கு தனி பட்டா வழங்காமல் விவசாயிகளை அலுவலர்கள் அலைகழித்து வருகின்றனர்.
இதனால் கரோனா ஊரடங்கு காலத்திலும் விவசாயத்தை மேற்கொள்வதற்கு எந்த ஒரு வங்கியிலும் கடன் பெற முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, தனி பட்டா வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:வெள்ளாற்றில் மணல் திருட்டு, பொதுமக்கள் குற்றச்சாட்டு