தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சேலம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள்: ஈடிவி பாரத் கள ஆய்வு முடிவுகள்! - Chief Minister Edappadi Palaniswami

சேலம் மாவட்டத்தில் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் கள ஆய்வு செய்தது. அதன் முடிவுகள் பின்வருமாறு...

சேலம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள்
சேலம் மாவட்டத்தில் அரசு திட்டங்கள்

By

Published : Dec 1, 2020, 11:29 AM IST

கடந்தாண்டு நவம்பர் மாதம் 19ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் வனவாசியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். அதேபோல புதிய திட்டப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது முதலமைச்சர் சேலம் மாவட்டத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட கட்டடங்கள் குறித்து விரிவாக பட்டியலிட்டார். அவை அனைத்தும் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் கள ஆய்வில் திறக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது உறுதிசெய்யப்பட்டது.

  • ரூ.9 கோடி மதிப்பில் வனவாசிபல்வகை தொழில் நுட்பக் கல்லூரி:

சேலம் - வனவாசியில் இயங்கி வரும் பல்வகை தொழில் நுட்பக் கல்லூரியில் கூடுதல் மாணவ, மாணவியர் தங்கும் விடுதிக் கட்டடம் ரூ.9 கோடி மதிப்பில் திறக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களின் போது, மக்கள் வைத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, இப்பகுதியில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி திறக்கப்பட்டது.

அதில் ஏற்கெனவே 2018ஆம் ஆண்டு ரூ.23 கோடி மதிப்பில் புதிய வளாக கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது 677 மாணவர்களும், 150 மாணவியர்களும் பயின்று வருகின்றனர்.

  • ரூ.9 கோடியே 65 லட்சம் மதிப்பில் நிலத்தடி நீரை செறிவூட்டும் பணிகள்:

நீர்வள ஆதாரத்துறை சார்பில் ரூ.9 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் ஏரிகள் புனரமைப்புப் பணிகள், புதிய நிலத்தடி நீரை செறிவூட்டும் கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

  • ரூ.1 கோடியே 32 லட்சம் மதிப்பில் காவல் நிலைய கட்டடங்கள்:

காவல் துறை சார்பில் ரூ.1 கோடியே 32 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கொங்கணாபுரம் ஊரகக் காவல் நிலைய கட்டடம், ஆத்தூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகக் கட்டடம் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன.

  • ரூ.2 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் புதிய வகுப்பறைக் கட்டடங்கள்:

பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ. 2 கோடியே 2 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில், சங்ககிரி வட்டம், சின்னப்பிள்ளையூர் அரசு உயர் நிலைப்பள்ளி மற்றும் ஜலகண்டாபுரம் அரசுப்பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், கலை மற்றும் கைத்தொழில் அறைக்கூடம் மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

  • ரூ.34 லட்சம் மதிப்பில் நூலகக் கட்டடம்:

நூலகத் துறை சார்பில் ரூ.34 இலட்சம் மதிப்பில் சேலம் மாவட்ட மைய நூலகத்தில் புதிய குழந்தைகளுக்கான சிறப்பு நூலகக் கட்டடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.

  • ரூ.5 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதிய ஆய்வுக் கூட்டரங்கம்:

கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.5 கோடியே 24 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைமையகத்தில் புதிய ஆய்வுக் கூட்டரங்கம் திறக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சமுதாயக் கூடம் புனரமைத்து நவீனமயமாக்கும் பணிகள், செட்டிமாங்குறிச்சி, மொத்தயனூர், பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 3 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான புதிய அலுவலக கட்டடங்கள் மற்றும் சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் பிழியும் ஆலை ஆகிய 7 முடிவுற்றப் பணிகளும் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளன.

  • ரூ.35 கோடியே 20 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் துணை மின் நிலையங்கள்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் ரூ. 51 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் எடப்பாடி கோட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட வருவாய் பிரிவு அலுவலக கட்டடம், எடப்பாடி வட்டம் ஆடையூரில் ரூ.19 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையம், கே.ஆர். தோப்பூரில் ரூ.15 கோடியே 62 லட்சம் மதிப்பில் புதிய துணை மின் நிலையம் திறக்கப்பட்டுள்ளன.

  • ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் புதிய பேரூராட்சி அலுவலக கட்டடம்:

பேரூராட்சி துறை சார்பில் பொது நிதி திட்டத்தின் கீழ், செந்தாரப்பட்டி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு ரூ.49 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இருப்பு அறை மற்றும் சுற்றுச் சுவருடன் கூடிய பேரூராட்சி அலுவலக கட்டடம் திறக்கப்பட்டுள்ளன

  • ரூ.21 லட்சம் மதிப்பில் தொகுப்பு வீடுகள் புனரமைப்புப் பணிகள்:

எடப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பூலாம்பட்டி பேரூராட்சியில் ரூ.21 லட்சம் மதிப்பில், பழுதடைந்த 42 தொகுப்பு வீடுகள் புனரமைக்கப்பட்டன.

  • ரூ.23 கோடியே 58 லட்சம் மதிப்பில் ராசிபுரம்-எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்டம்:

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் எடப்பாடி, கொங்கணாபுரம் ஒன்றியங்களில் முறையாக குடிநீர் கிடைக்கப்பெறாத 137 குடியிருப்புகளுக்கு மறுசீரமைப்பு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ், ரூ.23 கோடியே 58 லட்சம் மதிப்பில் ராசிபுரம்-எடப்பாடி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

  • ரூ.2 கோடியே 78 இலட்சம் மதிப்பில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் இனங்கள் திட்டம்:

ஒப்படைக்கப்பட்ட வருவாய் இனங்கள் திட்டத்தின்கீழ், ரூபாய் 2 கோடியே 78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டடமும், எடப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூபாய் 1 கோடியே 1 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பில் 11 பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.

  • ரூ. 50 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 50 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பில் கோணசமுத்திரம், அரசநத்தம், சாணாரப்பட்டி ஆகிய 3 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு கூடுதல் கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

  • ரூ.99 லட்சம் 37 ஆயிரம் மதிப்பில் உள்ளூர் பகுதி வளர்ச்சித் திட்டம்:

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்(என்.சந்திரசேகரன்) நிதியிலிருந்து உள்ளூர் பகுதி வளர்ச்சித்திட்டத்தின்கீழ், ரூ.99 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 10 பணிகள் திறக்கப்பட்டன.

அத்துடன் ரூ. 60 லட்சத்து 33 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள 7 புதிய அங்கன்வாடி மைய கட்டடங்களும், மூலதன மானிய நிதி திட்டத்தின்கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் கொங்கணாபுரம் ஊராட்சி ஒன்றியம், கரட்டூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, சாணாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி புதிய வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

  • ரூ.66 லட்சம் மதிப்பில் மாநில சமச்சீர் வளர்ச்சித் திட்டம்:

மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ், ரூ.66 லட்சம் மதிப்பில் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம், சின்னகல்ராயன் வடக்குநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப் பள்ளியின் புதிய வகுப்பறை கட்டடங்கள் திறக்கப்பட்டன.

  • ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம்:

வேளாண்மைத்துறை சார்பில் மகுடஞ்சாவடியில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய புதிய கட்டடமும், வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் ஆத்தூரில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டடமும் திறக்கப்பட்டுள்ளன.

  • ரூ.3 கோடியே 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கால்நடை மருத்துவமனை:

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.3 கோடியே 2 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் வீரபாண்டி, காருவள்ளி, கொளத்தூர், சின்னக்கோனூர், காட்டுக்கோட்டை, ஜலகண்டாபுரம், முளுவி மற்றும் செம்மநத்தம் ஆகிய 8 இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டடம் மற்றும் கால்நடை மருந்தக கட்டடங்கள் திறக்கப்பட்டுள்ளன.

  • ரூ.9 கோடியே 10 லட்சம் கண் சிகிச்சைப் பிரிவிற்கு புதிய கட்டடம்:

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் ரூ.9 கோடியே 10 லட்சம் மதிப்பில் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவு புதிய கட்டடம், ஓமலூர் அரசு மருத்துவமனையில் இரண்டாம் நிலை வசதியுடன் கூடிய கூடுதல் கட்டடம், மேட்டூர் அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் உயர் கலப்பின சார்பு மையக் கட்டடம், கொளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவப் பிரிவு கட்டடம் மற்றும் கரியகோவில் புதிய துணை சுகாதார நிலைய கட்டடம் உள்ளிட்ட 5 முடிவுற்றப் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

  • ரூ.40 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் குறுவட்ட அளவையர் அலுவலக கட்டடம்:

வருவாய்த் துறை சார்பில் ரூ.40 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் ஏற்காடு மற்றும் எடப்பாடியில் உள்ள குறுவட்ட அளவையர்களுக்கான குடியிருப்புடன் கூடிய 2 புதிய அலுவலக கட்டடங்கள் திறக்கப்பட்டன.

  • ரூ.2 கோடியே 76 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் பதிவுத் துறை கட்டங்கள்:

பதிவுத் துறை சார்பில் ரூபாய் 2 கோடியே 76 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் புதிய அலுவலக கட்டடங்களும், பால்வளத் துறை சார்பில் சேலம் ஆவினில் ரூ.94 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் தானியங்கி தயிர் பதப்படுத்துதல், தயிர் நிரப்பும் இயந்திரமும் மற்றும் சங்ககிரி வட்டம், தேவூரில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான புதிய அலுவலக கட்டடமும் வழங்கப்பட்டுள்ளன.

  • ரூ.10 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்திட்டங்கள்:

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.10 கோடியே 56 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் கல்வராயன்மலை,
கருமந்துறை, பகடுபட்டு, கரியக்கோயில்வளவு, அருநூத்துமலை, பச்சமலை வேப்படி, குன்னூர், பச்சமலை கொடுங்கல் ஆகிய இடங்களில் உள்ள அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிடப் பள்ளிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கழிவறைகள், பணியாளர் குடியிருப்புகள், சுற்றுச்சுவர், குடிநீர் வசதியுடன் உணவருந்தும் அறை, சமையலறை கட்டடங்கள் உள்ளிட்ட 9 முடிவுற்றப் பணிகள் தொடங்கப்பட்டன.

அவ்வாறு மொத்தம் ரூ.123 கோடியே 53 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 86 திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

புதியதாக அடிக்கல் நாட்டப்படுள்ள திட்டங்கள்:

  • நீர் வளத் ஆதாரத் துறையின் சார்பாக 100 ஏரிகளில் நீர் நிரப்புவதற்கான பல்வேறு பணிகள்
  • மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி என 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உட்பட்ட ஏரிகளை ரூ.44 கோடியே 43 லட்சம்
    மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள், இரண்டு தடுப்பணைகள் கட்டும் பணிகள்.
  • காவல் துறை, பள்ளிக் கல்வித்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ், ரூ.63 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் 7 புதிய திட்டப் பணிகள்.
  • பேரூராட்சித் துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பல்வேறு பணிகள், வருவாய்த்துறை, பால்வளத் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் என மொத்தம் ரூ.118 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் 44 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், இப்பணிகள் அனைத்தும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது ஈடிவி பாரத் தமிழ்நாடு கள ஆய்வில் தெரியவந்துள்ளது. அத்துடன் கடந்த 3 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் ஈரடுக்கு மேம்பாலங்கள், புதிய சாலைகள் பயன்பாட்டிற்குத் திறந்துவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நிவர் புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் - முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details