தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'மனசாட்சியின்றிச் செயல்படும் ஊடகங்கள்; அரசுக்கு எதிராகச் செய்தி வெளியிட அச்சம்!'

'நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதை யாரும் செய்தி வெளியிடுவதில்லை. தொலைக்காட்சிகள் மனசாட்சியின்றிச் செயல்படுகின்றன. அரசுக்கு எதிராகச் செய்தி போட பயப்படுகின்றன' என்று எடப்பாடி பழனிசாமி ஊடகச் செயல்பாடு குறித்த தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார்..

எடப்பாடி பழனிசாமி, EPS
எடப்பாடி பழனிசாமி

By

Published : Sep 23, 2021, 6:30 AM IST

Updated : Sep 23, 2021, 7:07 AM IST

சேலம்: சேலம் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி நேற்று (செப். 22) செய்தியாளருக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை இன்னும் திட்டமிடப்படவில்லை. ஒன்பது மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் பரப்புரை மேற்கொள்ளப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கி முறைகேட்டில் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாகத் தெரியவில்லை.

திமுக சொன்னதைச் செய்யாது

திமுக தேர்தல் அறிக்கையை அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்னர், என்றைக்கும் நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தேர்வினை ரத்துசெய்வேன் என்று கூறிய ஸ்டாலின் அதைச் செய்யவில்லை. நாங்கள் போட்ட தீர்மானத்தையே அவர்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளனர்.

கூட்டுறவு வங்கிகளில், நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ரத்துசெய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக்கடன் ரத்துசெய்ய புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

ஒரே நாடு; ஒரே தேர்தல்

2024ஆம் ஆண்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்படுகிறது. எனவே எம். எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் எட்டு பேர் மட்டுமே மருத்துவக் கல்வி பயின்ற நிலையில், கடந்தாண்டு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்ததால் 435 மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதே முறையை திமுக அரசும் பின்பற்றியிருக்கிறது.

திமுகவில் 13 பேர் மீது சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதிமுகவை மட்டுமே ஊடகங்கள் பேசிவருகின்றன. ஆட்சியில் இருக்கும்போதும், இப்போதும் அதிமுகவை மட்டுமே குறிவைத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன.

புழுதிவாரித்தூற்றும் திமுக

மக்கள் பிரச்சினையை எடுத்துச் சொன்னால் யாரும் வெளியிடுவதில்லை. நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதை யாரும் செய்தி வெளியிடுவதில்லை. தொலைக்காட்சிகள் மனசாட்சியின்றிச் செயல்படுகின்றன. அரசுக்கு எதிராகச் செய்தி போட பயப்படுகின்றன.

எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

ஒரு லட்சம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யாமல் தேங்கி கிடக்கின்றன. அவை மழையில் நனைந்து வீணாகின்றன. திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களாகிவிட்டது. மக்கள் பிரச்சினைகளைக் கவனிக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யாமல் அதிமுக மீது புழுதி வாரித்தூற்றுவதையும், அவதூறு செய்வதையே திமுக அரசு செய்துவருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோடநாடு வழக்கு - இருவரிடம் தனிப்படையினர் விசாரணை

Last Updated : Sep 23, 2021, 7:07 AM IST

ABOUT THE AUTHOR

...view details