நிலம், நீர், காற்று ஆகியவற்றில் அதி உச்ச மாசுபாட்டை ஏற்படுத்துவதில் நெகிழி முதலிடம் வகிக்கிறது. வளர்ந்த ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்பட்டு மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருந்து அகற்றப்பட்ட நெகிழி, இந்தியாவின் மக்கள் பயன்பாட்டில் இன்னமும் இருப்பது மிகப்பெரிய சாபக்கேடு என்கிறார்கள் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாட்டிற்கும் உற்பத்திக்கும் இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் தடை விதித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆனாலும் நெகிழி பயன்பாடு இன்றளவும் அறவே ஒழிக்கப்படவில்லை என்பது எதார்த்தம். இந்த சிக்கலில் இருந்து மீள்வதற்கான வழி, நெகிழிப் பொருட்களை மறுசுழற்சி செய்து வெவ்வேறு வடிவங்களில் மக்கள் பயன்பாட்டிற்கான பொருட்களாக தருவதே என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
அந்த வகையில் சேலம் சூரமங்கலத்தில் இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பிளாஸ்டிக் மறு சுழற்சி பொருட்கள் உற்பத்தியில் முன்னோடியாக திகழ்கிறது. குடிநீர் பாட்டில்கள், குளிர்பான பாட்டில்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை தூள் தூளாக்கி கூழ் போல செய்து மீண்டும் அவற்றிலிருந்து மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை வடிவமைத்து சுற்றுப்புற சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் சேலம் சூரமங்கலம் தனியார் கல்லூரி வெற்றியும் கண்டிருக்கிறது.
இதுகுறித்து அந்த கல்லூரியின் கட்டட பொறியாளர் துறை பேராசிரியை ஆர். மாலதி கூறுகையில், "அன்றாட பயன்பாட்டில் ஒன்றிக் கலந்துவிட்ட பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி மூலம் மீண்டும் வேறுவித பொருட்களாக மாற்றி பயன்படுத்த வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். அந்த வகையில் பெட் பாட்டில்கள் எனப்படும் பிளாஸ்டிக்கை தூள் தூளாக செய்து அவற்றுடன் மணல் சிமெண்ட் ஆகியவற்றை சேர்த்து 'பிரிக்ஸ்' செங்கல்கள் உருவாக்க முடியும். இதை வெற்றிகரமாக நாங்கள் செய்து அதற்கான அறிவுசார் காப்புரிமை பெற விண்ணப்பித்து இருக்கிறோம். இந்த பிளாஸ்டிக் பிரிட்ஜ், செங்கற்களைப் போன்று உறுதியானது. அதேநேரத்தில் சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு விளைவிக்காதது." என்று கூறினார்.