தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பாகனை மிதித்துக் கொன்ற கோயில் யானை - elephant attack death in salem

சேலம்: குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்ட ஆண்டாள் யானைக்கு திடீரென மதம் பிடித்து பாகனை மிதித்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

elephant attack death in salem
elephant attack death in salem

By

Published : Dec 3, 2019, 12:56 AM IST

சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த வன உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக யானை, மான், முதலை, பாம்பு, பறவை வகைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் பராமரிக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக மதுரை கள்ளழகர் கோயிலில் இருந்து 2009ஆம் ஆண்டு ஆண்டாள் என்ற யானை இந்த உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. இந்த யானையை பொள்ளாச்சிப் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர் பராமரித்துவந்தார்.

ஏற்கனவே மதுரை கள்ளழகர் கோயிலில் மூன்று பேரை தாக்கி கொன்ற ஆண்டாள் யானை, சேலம் குரும்பப்பட்டி உயிரியல் பூங்காவில், 2013ஆம் ஆண்டு பத்மினி என்கிற பெண்ணை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். மேலும் யானைக்கு வயது முதிர்ச்சி காரணமாகவும் பார்வை குறைபாடு காரணமாகவும் பூங்காவில் வைத்து பராமரிக்க முடியாததால், திருச்சியில் உள்ள யானைகள் முகாமிற்கு அனுப்ப மாவட்ட வனத்துறை சார்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை யானையின் உடல் நலம் குறித்து பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். எனவே மருத்துவ பரிசோதனை செய்வதற்காக வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவர்கள் நேற்று மாலை யானைக்கு பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது முதலில் யானை மருத்துவரை தாக்கியுள்ளது.

ஐந்து பேரை காலி செய்த ஆண்டாள் யானை

அதன் பின்னர் யானையை பாகனான காளியப்பன், யானையைக் கட்டுப்படுத்தி சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென்று மதம் பிடித்ததால் யானை, தன்னை கட்டுப்படுத்த முயற்சித்த பாகனை மிதித்துள்ளது. இதில் காளியப்பன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்த தகவலறிந்த வனத்துறை அலுவலர்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால் யானை ஆக்ரோசமாக இருந்ததால் யானை இருந்த இடத்திலிருந்து உயிரிழந்த காளியப்பன் சடலத்தை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கால்நடை மருத்துவர்கள் வனத்துறை அலுவலர்கள் ஆகியோர் உதவியுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தியபின் ஒன்றரை மணி நேரம் கழித்து காளியப்பன் உடலை மீட்டனர்.

தொடர்ந்து காளியப்பன் உடல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் ஆண்டாள் யானை பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் உயிரியல் பூங்காவில் வைத்து இனி பராமரிக்க முடியாது எனவும் ஓரிரு நாட்களில் இந்த யானையை முகாமிற்கு அனுப்பப்படும் எனவும் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார். 65 வயதான ஆண்டாள் யானை தாக்கியதில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்பது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details