சேலம் மாநகராட்சி, அம்மாப்பேட்டை மண்டலம் இந்திய கைத்தறி தொழிநுட்ப கழக வளாகத்தில் கரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு இந்திய மருத்துவம், ஹோமியோபதித் துறை சார்பில் ஆரோக்கியம் திட்டத்தின் கீழ் கபசுரக் குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளை மாவட்ட ஆட்சியர் சி.அ. ராமன் வழங்கினார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில், "தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி, சேலம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு கபசுரக் குடிநீர், சத்து மாத்திரைகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுவருகின்றது. இந்திய மருத்துவம், ஹோமியோபதி சார்பில் கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்படா வண்ணம் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கும் பொருட்டு, ஆரோக்கியம் என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்படி, சேலம் மாவட்ட சித்த மருத்துவத் துறையின் சார்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகள், நகராட்சி பகுதிகள், பேரூராட்சி பகுதிகள், ஊராட்சி பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்து நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள நபர்கள், தூய்மை பணியாளர்கள், முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்கள், அரசு மருத்துவமனைகளுக்கு வருகை தரும் பொதுமக்கள், கரோனா வைரஸ் நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 15 வகையான மூலிகை பொருள்கள் அடங்கிய கபசுரக்குடிநீர், வைட்டமின் டானிக், அஸ்கார்பிக் ஆசிட் மாத்திரைகள், ஜிங்க் சல்பேட் மாத்திரைகள், ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை 2,44,110 நபர்களுக்கு கபசுரக் குடிநீர், நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டுள்ளதோடு, மாவட்டம் முழுவதும் வழங்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. மேலும், வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்து வருகை தரும் நபர்கள் தனிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.