சேலம்: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து இருப்பதன் மூலம் திமுக, அதிமுக தப்பித்துக் கொண்டன என இயக்குனர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணை கட்ட நிலம் வழங்கிய விவசாயிகளை சந்தித்த இயக்குனர் வ.கௌதமன், அவர்களிடம் இருந்து பெற்ற கோரிக்கை மனுக்களை சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அவர்களிடம் ஒப்படைத்தார்.
இயக்குனர் வ.கெளதமன் செய்தியாளர் சந்திப்பு அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவேன் என்று சொன்னதும் பலர் எதிர்த்தார்கள். ஆனால் தமிழ் பேரரசு கட்சி வரவேற்கிறது. இந்திய ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். எங்கு வேண்டுமானாலும் தேர்தலை சந்திக்கலாம். மக்களுக்கு சேவை செய்ய வரலாம்.
ஆனால் யாருடைய தூண்டுதலும் யாருடைய வற்புறுத்தலுக்கும் இணங்க , அடிமைப்பட்டு சிதைந்து கிடக்கும் மக்களை அடமானம் வைக்க வராதீர்கள் என்று தமிழ்ப் பேரரசு கட்சி கூறியது. தற்போது ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை என்று உடல்நிலையை காரணம் காட்டி கூறியிருக்கிறார்.
தன்னுடைய வயதையும், உடல் நிலையும் காரணம் காட்டிய பிறகு அதைப்பற்றி விமர்சனம் செய்வது தமிழர் அறமில்லை. ஆனால் விருப்பமில்லாத ரஜினியை முடிந்த வரைக்கும் பலவந்தப்படுத்தி கட்சி தொடங்க வற்புறுத்திய பாரதிய ஜனதா கட்சிக்கு தேர்தலுக்கு முன்பாகவே மிகப்பெரிய படுதோல்வி அடைந்தது.
ரஜினிகாந்தை வைத்து தமிழ்நாட்டில் வித்தை காட்டலாம், ரஜினியை வைத்துக்கொண்டு திமுகவை ஒழித்துவிடலாம், அதிமுகவை ஒழித்துவிடலாம் என்று நினைத்தார்கள். ரஜினி மூலமாக வெற்றி அடைந்து அடுத்த கட்டமாக தமிழ்நாட்டில் அதிமுக-வை இல்லாமல் செய்துவிடலாம் என்று நினைத்தார்கள். ஆனால் தற்போது ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று கூறியிருப்பதால் திமுகவும் தப்பித்து விட்டது, அதிமுகவும் தற்போதைக்கு தப்பித்து விட்டது. ஆனால் தமிழ்நாடு மக்கள் இந்த பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து தப்பிக்க வில்லை என்பதை தமிழ் மக்கள் உணரவேண்டும்.
ரஜினிகாந்த் நல்லாட்சி தருவேன், மாற்றம் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை என்று கூறினார். இதற்கு முன்னதாக ரஜினிகாந்த் என்ன மாற்றத்தை தமிழ்நாட்டிற்கு கொடுத்துள்ளார். என்ன தியாகம் செய்துள்ளார் .
பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை தமிழின மக்கள் ரஜினிகாந்திற்கு கொட்டிக் கொடுத்து வருகிறார்கள். பணம், புகழ் என எல்லாவற்றையும் தந்தவர்கள் இந்த தமிழ் மக்கள். ஆனால் இதுவரை இந்த தமிழ் மக்களுக்காக ரஜினிகாந்த் எதுவும் செய்யவில்லை
உண்மையிலேயே மாற்றம் வரவேண்டும் என்றால் இந்த தமிழ்நாடுமக்களுக்காக யார் ரத்தம் சிந்தி பாடுபடுகிறார்களோ அவர்களை மக்கள் தேர்வு செய்யவேண்டும் என தெரிவித்தார்
இதையும் படிங்க: 'என்னை மன்னியுங்கள்' - ரஜினிகாந்த்!