சேலம், ஆவின் பால் பண்ணையில் தரக் கட்டுப்பாட்டு பிரிவில் பணிபுரியும் 25 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
வழக்கமாக, சேலம் மாநகர் முழுவதும் ஆவின்பால் பாக்கெட்டுகள், நாள்தோறும் அதிகாலை மூன்று மணியிலிருந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் நிலையில், இன்று (ஆக. 28) காலை எட்டு மணி வரையிலும், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, வின்சென்ட், காந்தி ரோடு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆவின்பால் விற்பனை நிலையங்களுக்கு பால் வராமல் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், அப்பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகளைக் கொண்டிருக்கும் குடும்பங்கள் உள்பட பலரும் பெரும் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில், இது குறித்து பேசிய ஆவின் முகவர்கள், "ஆவின் பால் பண்ணையில் பால் பாக்கெட் அடுக்கும் பணியில் ஈடுபடும் நபர்கள், கரோனா அச்சம் காரணமாக பணிக்கு வராத காரணத்தினால் ஆவின் பால் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தனர் .
”பால் இவ்வளவு காலதாமதமாக வந்தால் நாங்கள் எப்படி விற்பனை செய்வது எனப் புரியவில்லை” என்று விற்பனையாளர்களும் இது குறித்து வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ஆவின் முகவர்களிடம் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்த நிலையில், காலை எட்டு முப்பது மணி அளவில் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இயங்கி வரும் ஆவின் பால் வழங்கும் நிலையங்களுக்கு பால் பாக்கெட்டுகள் எடுத்து வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டதாக அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.