சேலத்தில் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இதையொட்டி கட்சி அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டிருந்த தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் சிலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் திறந்து வைத்தார். இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
பின்னர் பொதுக்கூட்ட மேடையில் பிரகாஷ்காரத் பேசுகையில்," இந்தியாவை தற்போது ஆர் எஸ் எஸ் இயக்கம்தான் ஆட்சி செய்து வருகிறது . மோடி அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இந்தியாவின் அரசியல் சாசன சட்டத்தை நீர்த்துப்போகும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு சட்டத்தை நீக்கிய மத்திய அரசு, அம்மாநில மக்கள் சுதந்திரமாக செயல்பட முடியாத சூழலை உருவாக்கியுள்ளது.