சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நயனம் பட்டியில் வசிப்பவர் ராஜா (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மகள் மீனாவும் (23) இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் திருமணத்தை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததால் இருவரும் திருப்பூரில் தங்கி அங்கு உள்ள பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் ஓராண்டு கழித்து மீனாவுக்கு கடந்த ஜூன் மாதம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நேரம் அவரது மனநிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் சேலத்தில் உள்ள மீனாவின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கணவர் சம்பத்துடன் மீனாவை சேலத்துக்கு அழைத்து வந்து, அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சையில் மீனா இருக்கும்போதே கடந்த ஆகஸ்ட் மாதம் மீனா ராஜா தம்பதியரின் இரண்டு மாத குழந்தையை ரூபாய் மூன்று லட்சத்துக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் ஓரளவு தெளிவு பெற்ற மீனா குழந்தை மற்றும் கணவர் குறித்து விசாரித்துள்ளார். குழந்தையை விற்றுவிட்டதாக மீனாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். "கணவர் பற்றி தெரியாது. நீ இந்த விஷயத்தை இத்துடன் மறந்துவிடு" என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் தனது குழந்தையை மீட்க வேண்டும். அதற்கு முன் கணவரை சந்திக்க வேண்டும் என்பதற்காக திருப்பூருக்கு சென்று உள்ளார் மீனா. அங்கு கணவரை சந்தித்து நடந்ததைக் கூற இருவரும் சேர்ந்து ஆட்டையாம்பட்டி காவல்நிலையத்தில் தங்களது குழந்தையை ரூ மூன்று லட்சத்திற்கு விற்கப்பட்டு உள்ளதாக கூறி குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என்று புகார் அளித்தனர்.