சேலம் மாவட்டத்தில் சமூகநலத் துறை சார்பாக 2020-21ஆம் ஆண்டில் ஏழாயிரத்து 100 மகளிருக்குத் திருமண உதவித் திட்டத்தின்கீழ் ஒரு பவுன் தங்கம் வழங்கப்பட உள்ளது.
மேலும் பத்தாம் வகுப்பு, பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப உதவித்தொகை வழங்குவதற்காக 56 கோடியே 48 லட்சத்து 21 ஆயிரத்து 538 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பத்தாம் வகுப்பு முடித்த இரண்டாயிரத்து 363 பேர், பட்டப்படிப்பு முடித்த நான்காயிரத்து 737 பேர் என ஏழாயிரத்து 100 மகளிர் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற உள்ளனர்.
இந்நிலையில் முதற்கட்டமாக முதலமைச்சர் பழனிசாமி நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் 59 மகளிருக்கு ஒரு பவுன் தங்கம், உதவித்தொகை வழங்கி இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் கைவினைப் பொருள்களின் ஆன்லைன் விற்பனைக்காக சேலம் மதி என்ற செல்போன் செயலியையும் அவர் தொடங்கிவைத்தார். இந்தச் செயலி மூலமாக முதற்கட்டமாக இரண்டாயிரம் பொருள்கள் விற்பனை செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் மகளிர் நலத் திட்டங்களைத் தொடங்கிய முதலமைச்சர் பழனிசாமி இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன், திட்ட இயக்குநர் அருள்ஜோதி, வருவாய்த் துறை அலுவலர்கள், சமூகநலத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க:இன்று புதிய தொழிற்கொள்கையை வெளியிடும் முதலமைச்சர்!