சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம் காருவள்ளி சின்னதிருப்பதியில் உள்ள பிரசன்ன வெங்கட்டரமண சுவாமி திருக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் முழுவதிலும் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த வருடமும் புரட்டாசி மாதத்தையொட்டி தினந்தோறும் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றுவருகிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் மூன்றாம் சனிக்கிழமையான நேற்று பிரமோற்சவ விழா நடைபெற்றது. இதில், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனையொட்டி காலை முதலே ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பிரசன்ன வெங்கட்டரமண சுவாமிகளுக்கும், ஆஞ்சநேயருக்கும் பால், நெய், தயிர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பெருமாளை வழிபட்ட பக்தர்கள் இதையடுத்து, பல்வேறு நறுமண பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகள் அணிவிக்கப்பட்டதோடு, விலை உயர்ந்த ஆபரணங்கள் பிரசன்ன வெங்கட்டரமண சுவாமிக்குச் சாத்தப்பட்டுச் சிறப்பு அலங்காரத்துடன் பூஜைகள் நடைபெற்றன. இந்த வைபவத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதகராய் காட்சியளித்த பிரசன்ன வெங்கட்டரமண சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமிக்குப் பஜனைகள் பாடி தரிசனம் செய்து வழிபட்டனர்.
புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமை என்பதால் பெங்களூரு, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், ஈரோடு, உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், பூஜைகளில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
காருவள்ளி சின்னதிருப்பதியில் நடைபெற்ற பிரமோற்சவ விழா இதையும் படிங்க:மைசூரு தசரா கோலாகலமாகத் தொடக்கம்