தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் - சேலம்

தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்திடும் வகையில் பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ANBIL MAHESH POYYAMOZHI
அனைத்துப் பள்ளிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும்

By

Published : Jun 13, 2021, 8:13 AM IST

சேலம்:சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

அரசுப் பள்ளிகளின் கட்டடங்களின் தரம், கூடுதலாக தேவைப்படும் கட்டடங்கள், ஆய்வக வசதிகள் குறித்து ஆசிரியர்களிடம் கேட்டறிந்த அவர், பெண்கள் பள்ளிகளில், அவர்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை ஆய்வு செய்தார்.

அன்பில் மகேஷ் அறிவுரை

குறிப்பாக, கழிவறைகள் பாதுகாப்பாகவும், சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறையுடன் அனைத்து ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சேலம் மாவட்டம் உடையாப்பட்டி, வீரபாண்டி, ஓமலூர், சின்ன சீரகாபாடி உள்ளிட்டப் பல்வேறு இடங்களுக்குச் சென்று அரசுப் பள்ளிகளை பார்வையிட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மழையினால் ஒழுகும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை உடனடியாக மாற்றி, புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடுகளை தயார் செய்யும்படி அலுவலர்களிடம் வலியுறுத்தினார்.

கரோனா தான் முதல் கவனம்

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில், பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

பெண் குழந்தைகளின் நலனுக்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் அதுகுறித்து, அரசு அறிவித்துள்ள குழுவிடம் புகார் செய்யலாம்.

அக்குழுவினர் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள். இதுதொடர்பான மனுக்கள் வரப்பெற்றுள்ளன. அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கரோனாவைக் கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்றுவதில் முதலமைச்சர் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆன்லைன் வகுப்புகளில் சிரமம்

கரோனா பாதிப்பு குறைந்து நிலைமை சீரானதும், பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார். பள்ளிகளைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை தற்போது ஆய்வு செய்து வருகிறோம். ஆன்லைன் வகுப்புகள் தனியார் பள்ளிகள் சார்பில் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது, மாணவர்கள் சில சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

முதலமைச்சர் அறிவிப்பார்

ஒரே குடும்பத்தில் இரண்டு மாணவர்கள் இருந்தால் அவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்பதில் சிரமம் ஏற்படுகிறது.

ஆன்லைன் வகுப்புகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வரும் திங்கட்கிழமை (ஜுன் 14) முதலமைச்சரை சந்தித்து தெரிவிக்க உள்ளோம். எல்லோருக்கும் முறையான ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் வகையில் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிடுவார் " என்று கூறினார்.

இதையும் படிங்க: பிரதமர் நரேந்திர மோடி ஒரு கோழை- பிரியங்கா காந்தி

ABOUT THE AUTHOR

...view details