மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டம் 2019ஐ திரும்பப் பெற வேண்டும், சேலம் மாவட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களின் பிரச்னைகளை தீர்க்க முத்தரப்பு குழு கூட்டத்தை ஆட்சியர் தலைமையில் நடத்த வேண்டும், மானிய விலையில் ஆட்டோ தொழிலாளர்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஏஐடியுசி சார்பில் ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சேலம் மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் முருகன் கூறுகையில், ’சேலம் மாவட்டத்தில் ஆர்டிஓ எல்லை பிரச்னையால் ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நகரத்திலிருந்து கிராமப் பகுதிக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும்போது எல்லை மாறி வந்து விட்டதாகக் கூறி காவல்துறையினரும் போக்குவரத்துத் துறையினரும் ஆட்டோ தொழிலாளர்களின் உரிமத்தை வலுக்கட்டாயமாக பெறுகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.