கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் பழனிசாமி, ஆட்சியர் ராமன், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி,
சேலம் மாவட்டத்தின் 9 இடங்கள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். தடைசெய்யப்பட்ட பகுதிகளில் 24 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர் எனவும் கூறினார்.
பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறிய முதலமைச்சர், 98 விழுக்காடு குடும்ப அட்டைதாரர்களுக்குஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
சேலத்தில் 78 பெரிய மளிகைக் கடைகள் மூலம் மளிகைப் பொருட்கள் டோர் டெலிவரி செய்யப்படுவதாகவும், 150 வாகனங்கள் மூலம் காய்கறிகள் வீதிவீதியாகக் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக கூறிய முதலமைச்சர், வேளாண் விளைப்பொருட்களைச் சந்தைப்படுத்த எந்தவிதத் தடையும் கிடையாது என்றார். மேலும், ஜவ்வரிசி ஆலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்றும் சர்க்கரை ஆலைகள் இயங்க ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
ராபிட் டெஸ்ட் கருவி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, சீனாவில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட 24 ஆயிரம் ராபிட் டெஸ்ட் கிட்கள் தமிழ்நாடு வந்துள்ளன என்று தெரிவித்தார்.