நாட்டின் 74ஆவது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று (ஆக.15) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் சுதந்திர தின விழா கொண்டாப்பட்டுவருகிறது.
அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன், காந்தி விளையாட்டு மைதானத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
அதையடுத்து அவர் கரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட முன் களப் பணியாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
சேலம்:
சேலம் மாநகராட்சி ஆணையாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆணையாளர் ரெ. சதீஷ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
ஈரோடு:
அதேபோல ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் அம்மாவட்ட ஆட்சியர் கதிரவன் தேசிய கொடியை ஏற்றி சிறப்பித்தார். அதையடுத்து கரோனா பாதுகாப்பு பணிகளில் காவல்துறை, சுகாதாரத் துறை உள்பட பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த 70 காவலர்களுக்கும் பல்வேறு அரசுத்துறை மற்றும் தன்னார்வலர்கள் 279 பேருக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். அதையடுத்து அவர் அரசு துறைகளுக்கு ரூ. 3 கோடியே 67 லட்சத்து 64 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நாமக்கல்:
நாமக்கலில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஆட்சியர் மெகராஜ் தேசியகொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.
அந்த விழாவில் கரோனா முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், காவல்துறையினர், தூய்மை பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட 173 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
தருமபுரி:
தருமபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் சு.மலர்விழி தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், சார் ஆட்சியர் மு.பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கரூர்:
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அன்பழகன் தேசியக் கொடியேற்றினார். அதில் முன்களப் பணியாளர்களுக்கு சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கப்பட்டன. அந்த நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், வருவாய் அலுவலர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
குறிப்பாக கரூர் மாவட்ட ரயில் நிலையம் முன்பு 100 அடி உயரம் கொண்ட கொடிக்கம்பத்தில் கரூர் ரயில்வே மேலாளர் ராஜராஜன் தேசியக் கொடி ஏற்றி சிறப்பித்தார். இந்த கொடியானது புனோவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும்.
இதையும் படிங்க:சுதந்திர தினம் 2020: தமிழ்நாடு அரசு விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்