மதுரை : மதுரையின் மகத்தான அடையாளங்களுள் ஒன்றுதான் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. மதுரையிலிருந்து சற்றேறக்குறைய 25 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள வளமான சிற்றூர் அலங்காநல்லூர்.
மதுரையை ஆண்ட நாயக்க ஆட்சியாளர்களுக்கு முன்பாக கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு, மதுரை மாவட்டம் தேனூர் வைகையாற்றில்தான் நிகழ்ந்தது. பின்னாளில் சைவ, வைணவ சமய ஒற்றுமை காரணமாக திருமலை நாயக்கர் தேனூர் நிகழ்வை மதுரைக்கு மாற்றினார்.
அழகர் அலங்காரநல்லூர்
அப்போதுவரை திருமாலிருஞ்சோலை எனும் அழகர்மலையிலிருந்து புறப்படும் கள்ளழகர், அலங்காநல்லூர் வழியாக தேனூரைச் சென்றடைந்து நாரைக்கு முக்தி கொடுப்பது வழக்கமாக இருந்தது. கள்ளழகர் தற்போதைய அலங்காநல்லூரில் தன்னை அலங்காரம் செய்து கொண்டு குதிரையில் தேனூரை நோக்கி பயணித்து வந்தார்.
இதன் காரணமாக அலங்காரநல்லூர் என்ற பெயரால் அழைக்கப்பட்டு பின்னாளில் மருவி, அலங்காநல்லூரானது என்பது வரலாறு. தமிழர்களின் பண்டைய திணைப் பிரிவினையின் வாயிலான வாழ்க்கை முறையில், தற்போதைய அலங்காநல்லூர், காடும் காடு சார்ந்த முல்லைப் பகுதியாக இருந்தது.
மக்களின் வாழ்வியலோடு கலந்த பசுக்கள்
அந்த வாழ்வியல் முறைப்படி இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர், ஆய்ச்சியர், இடையர், இடைச்சியர் என்பதாக அறியப்பட்டனர். அன்றைய காலகட்டத்தில் சாதிப்பாகுபாடு கிடையாது. நிலப்பாகுபாடு மட்டுமே. அவர்களின் வாழ்வியல் துணைவனாக இருந்தவை கால்நடைகளே.
குறிப்பாக பசுக்கள் மற்றும் காளைகள். அலங்காநல்லூர் பகுதி முல்லை நிலத்தைச் சார்ந்ததாகும். ஆக, அம்மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த பசுக்கள் மற்றும் காளைகளை இன்றும்கூட அலங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயல்பாகக் காண முடியும்.
கலித்தொகை
சிந்துசமவெளியிலிருந்தே ஏறு தழுவுதல் என்ற பண்பாட்டு நிகழ்வு இருந்ததை அங்கு கிடைத்த தொல்லியல் சின்னங்கள் உறுதி செய்கின்றன. அதன் வழி வழி மரபாகத்தான் அலங்காநல்லூரிலும் ஏறு தழுவுதல் என்ற இன்றைய ஜல்லிக்கட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
அடக்குதல் என்பதற்கும் தழுவுதல் என்பதற்கும் பொருள் வேறாகும். நமது சங்க இலக்கியங்களுள் ஒன்றாக கலித்தொகை, 'கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய மகள்' என்று குறிக்கிறது. காளையின் நேர் நிற்க அஞ்சுபவனை தனது மறுபிறப்பிலும் கூட அப்பெண் மகள் தொடமாட்டாள் என்பது இதன் பொருளாகும்.
ஜல்லிக்கட்டு
வரலாறு கூறும் 'வீரபாண்டியக் கட்டபொம்மன்' திரைப்படத்திலும்கூட, வெள்ளையம்மா என்ற பாத்திரப்படைப்பு, தான் வளர்க்கும் காளை குறித்து, 'அஞ்சாத சிங்கம் என் காளை... அது பஞ்சா பறக்கவிடும் ஆளை...' என்ற பாடல் இடம் பெற்றிருக்கும்.
அதனைத் தழுவி அணைகின்ற வீரனை அப்பெண் மண முடிப்பது போன்ற காட்சி அதில் உண்டு. இது கலித்தொகை பாடல் வரிகளை நினைவுபடுத்துகின்ற சமகால பதிவாகும். இன்றைக்கு ஜல்லிக்கட்டாய் மாறிப்போனாலும், அதன் வரலாற்றுப் பெயர் 'ஏறு தழுவுதல்' என்பதேயாகும். சல்லி என்பது இரும்பாலான ஒரு வளையம்.
சல்லிக்காசு விளையாட்டு
அதனை மாட்டின் இரு கொம்புகளுக்கிடையே மாட்டி வைத்துவிட்டு களமிறக்குவார்கள். அந்தக் காளையை தழுவுகின்ற இளைஞன் அந்த சல்லி வளையத்தை எடுத்தால்தான் அவன் வீரனாக அறிவிக்கப்படுவான் என்பதும், இந்த சல்லி முறை, சல்லிக்காசு முடிப்பாக பின்னாளில் மாறுகிறது.
சல்லிக்காசுகளை ஒரு துணியில் முடிந்து அதனை காளைகளின் கொம்புகளுக்கிடையே கட்டிவிடுவார்கள். காளையைத் தழுவுகின்ற இளைஞன் அச்சல்லிக்காசு துணி முடிப்பைக் கைப்பற்றினால் அவன் வீரனாக அறிவிக்கப்படுவான். இந்த சல்லிதான் ஜல்லிக்கட்டாக மாற்றம் பெறுகிறது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
மெரினா புரட்சி
காலமாற்றத்தில் காளைகளை தழுவுவதில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இவ்விளையாட்டிற்குத் தடை கோரி சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. பிறகு சற்றே தடையைத் தளர்த்தி, 77 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அதற்கும் சிலர் தடையாணை பெற்றதால் கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தில் பெரும் யுகப்புரட்சியே நடந்தது. அதுதான் மெரினா புரட்சி, காளைப் புரட்சி, அலங்கைப் புரட்சி என்பதாக அழைக்கப்பட்டது.
அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், இதற்காக டெல்லி சென்று அங்குள்ள அமைச்சர்கள், அலுவலர்களை சந்தித்து, இரண்டு நாள்கள் தங்கி அதற்குரிய ஆணையைப் பெற்று வந்து, தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றிலேயே முதன் முறையாக இரவில் சட்டப்பேரவையை கூட்டி புதிய திருத்தத்திற்கும், சட்டத்திற்கும் ஒப்புதல் அளித்து ஜல்லிக்கட்டு தடையின்றி நடைபெற வழி வகுத்தார்.
ஜன.17 ஜல்லிக்கட்டு
தற்போது கரோனா வைரஸின் உருமாறிய புதிய வரவான ஒமைக்ரான் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 150 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநிலத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் வருகிற 17ஆம் தேதி திங்கள்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் போட்டிகள் திங்கள்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதையும் படிங்க : இளைஞனின் உடற்கட்டைத் தீர்மானிப்பதே ஜல்லிக்கட்டு!