கொரோனோ வைரஸ் தாக்குதல் அச்சம் காரணமாக ஜப்பான் நாட்டின் யோகஹாமா கப்பலில் உள்ள 5 தமிழர்கள் உட்பட 162 இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அக்கப்பலில் உள்ள தமிழர் அன்பழகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தவிப்பு
ஜப்பான் நாட்டின் யோகஹாமா துறைமுகத்தில் டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் 5 தமிழர்கள் உட்பட 162 இந்தியர்கள் பணியாற்றிவருகின்றனர். மேலும் இக்கப்பலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர்.
அவர்களில் 120க்கும் மேற்பட்டோர் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் அக்கப்பலில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் நிலையில் அவர் வாட்ஸ்அப் வீடியோ மூலமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அபாயக் குரல்
அதில் அவர், “எங்களது குழு உறுப்பினராக இருந்த இரண்டு இந்தியர்கள் கொரோனோ வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வைரஸ் தாக்குதலுக்கு இங்குள்ள மற்றவர்களும் இலக்காகக் கூடும் என அஞ்சுகிறோம்.
கொரோனாவால் இந்தியர்கள் பாதிக்கப்படும் அபாயம்: ஜப்பான் கப்பலிலிருந்து அபாயக் குரலெழுப்பும் தமிழர் ஆகையால் இந்திய அரசு விரைவாக எங்களை மீட்க வேண்டும் என்பதை வேண்டுகோளாக முன்வைக்கிறோம். மதுரை மாவட்டத்தில் நான் இருக்கின்ற திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணன் இதுதொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குரல் கொடுத்துள்ளார். இந்த வைரஸின் தாக்குதலிலிருந்து நாங்கள் தப்பிக்க வேண்டுமானால் உடனடியாக எங்களை மீட்டு இந்தியாவிற்கு கொண்டு செல்ல வேண்டும்” என கூறியுள்ளார்.
இதையும் படிங்க:திருப்பத்தூர் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு