மதுரை :உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரியில், தொல்லியல் துறை சார்ந்த இரண்டு ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில், முதுகலைப் பட்டய படிப்பில் சேர, இந்திய வரலாறு, தொல்லியல்துறை, மானுடவியல் ஆகிய துறைகளில் முதுகலைப் பட்டம், சமஸ்கிருதம், பாலி, அரபு மொழிகளில் தேர்ச்சி ஆகியவை தகுதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது. கல்வித் தகுதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.
செம்மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்தும், தமிழ் மொழியை இணைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்.9) விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர், மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பாக செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்து நேற்று (அக்.8) அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்தார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.
அறிவிப்பாணை வெளியிடும் போதே ஏன் செம்மொழியான தமிழ் மொழியை இணைக்கவில்லை. இந்த அறிவிப்பாணையை தயார் செய்த அதிகாரி யார்? அறிவிப்பாணை தயார் செய்யும் ஒரு தொல்லியல் துறை அதிகாரி, எந்தெந்த மொழிகள் செம்மொழிகள் என்று தெரியாத அளவிற்கு செயல்படுவாரா? அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மத்திய அரசு சார்பாக தற்போது தமிழ் மொழியை இணைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறுகிறீர்கள். உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்பு தான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும் மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பிய பின்புதான் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
ஒருவேளை எதிர்ப்பு குரல்கள் எழுப்பவில்லை என்றால் தமிழ்மொழி இணைக்கப்பட்டு இருக்குமா என்றும் கேள்வி எழுப்பினர். மொழிகளைப் பற்றிய பிரச்சினைகளைக் கையாளும் போது கவனமாக செயல்பட வேண்டும். இந்தியாவில் ஜாதிமத அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. மொழிவாரியாக தான் பிரிக்கப்பட்டுள்ளன.
பழமையான மொழியான தமிழ் மொழியை மறந்து தொல்லியல் துறை சார்பாக அறிவிப்பை வெளியிட்டது ஏன் என்று கேள்வி எழுப்பி நீதிபதிகள், பொறுப்பற்ற முறையில் நடந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு விரிவாகப் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க : கணவருடன் செல்ல எம்எல்ஏ மனைவிக்கு நீதிமன்றம் அனுமதி...!