மதுரை: அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத் தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பில் பயிற்சிக்கூட்டம் டி. குன்னத்தூரில் அம்மா கோயிலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும் மதுரை அதிமுக புறநகர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான ஆர்.பி. உதயகுமார் எம்எல்ஏ கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார்.
ஜெயலலிதாபோல் சமூகநீதி காத்த எடப்பாடி
பின்னர் அவர் பேசுகையில், "நீட் தேர்வை காங்கிரஸ் கொண்டுவந்தபோது, வாய்மூடி மவுனமாக இருந்தது திமுகதான். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நீட் வரக்கூடாது என்று சட்டப்பேரவையில் மசோதாவை நிறைவேற்றி அதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைத்தார். அதனைத் தொடர்ந்து பிரதமருக்கு கோரிக்கைவைத்தார். அதேபோல் உச்ச நீதிமன்றம் வரை கடுமையாகப் போராடினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை கொண்டுவந்து சமூக நீதியைக் காத்ததுபோல் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை எடப்பாடி வழங்கினார்.
இதன்மூலம் கடந்தாண்டு 435 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு கிடைத்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று கூறியவர்கள் தற்போது நீட் தேர்வு இருக்கிறதா என்பதை தற்போதுவரை சொல்லவில்லை.
பெட்ரோல் டீசல் விலை... வாக்குறுதி?
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்போம் என்று கூறினார்கள். ஆனால் இன்றைக்கு மதுரை உள்பட 31 மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டிவிட்டது.
இதனால் அத்தியாவசிய பொருள்கள் விலை அதிகரித்துள்ளது. தற்போது கரோனாவால் பொருளாதாரச் சிக்கலில் வாழ்ந்துவரும் மக்கள் மேலும் சிரமம் அடைந்துள்ளனர். அதேபோல் தொழில்முனைவோர்களும் மிகவும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தால் விலை குறையலாம் என்று மக்கள் எண்ணுகின்றனர். அரசு உத்தரவிட்டால் அதைச் செயல்படுத்த அலுவலர்கள் தயாராக உள்ளனர். தற்போது சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள். ஏன் தேர்தலுக்கு முன்பு சாத்தியமில்லை என்று கூறவில்லை?
மின்வெட்டுக்கு காரணம் அணிலா?
அதேபோல் நீட் தேர்வில் மழுப்பலான பதிலைக் கூறுகிறார்கள். தேர்தலுக்கு முன்பு இதைக் கூறவில்லை. இதன்மூலம் மக்கள் மீது அக்கறை இல்லாததைத்தான் காட்டுகிறது.
அதேபோல் மின்சாரத் துறையில் அனுபவம்வாய்ந்த சிலர் அமைச்சராகப் பணியாற்றியுள்ளனர். ஆனால் யாரும் அணில் மீது பழி சுமத்தவில்லை. நாம் அனில் அம்பானியைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் மின்சாரத் துறை அமைச்சர் மின்வெட்டுக்கு காரணம் அணில்தான் என்று கூறுகிறார். அவர் கூறியது மிகவும் விந்தையாக இருக்கிறது.
கடந்த கால திமுக ஆட்சியில் கடுமையாக மின்வெட்டு இருந்தது. இதை அப்போது அமைச்சராக இருந்த ஆற்காடு வீராசாமி ஒப்புதல் வாக்குமூலமே கொடுத்துள்ளார்" என்று தெரிவித்தார்.