குறிப்பாக அதிமுக என்ற மிகப்பெரும் கட்சி, ஜெ.வின் மறைவுக்குப் பிறகு பிளவுற்று மிகப்பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அக்கட்சியின் பெருமளவு வாக்குகளைப் பிரிப்பார் என்று கருதப்படுகின்ற டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறது என்பதும் முக்கியமான ஒன்றாகும்.
அதேபோன்று கருணாநிதியின் மறைவிற்குப் பிறகு அவரது மகன் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சந்திக்கும் முதல் மக்களவைத் தேர்தலும் இதுவாகும். ஆகையால் அந்தக் கட்சிக்கும் புதிய தலைவரின் ஆளுமையை உரசிப் பார்த்துக் கொள்ளும் ஓர் உரைகல்லாகவும், தொடர்ந்து இண்டாவது முறையாக ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் அதிமுகவை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்தத் தேர்தலை திமுக பார்க்கிறது.
இவர்களுக்கு அடுத்தபடியாக அரசியல் நோக்கர்களின் கவனத்தை ஈர்த்துள்ள கட்சியாக சீமானின் நாம் தமிழர் கட்சி பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 மக்களவைத் தொகுதிகளிலும் சரிபாதியாக பெண்களை நிறுத்தி வியக்க வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் எந்தக் கட்சிகளும் செய்யாத ஒன்றை நாம் தமிழர் கட்சி செய்திருப்பதும், ஆங்காங்கே ஜாதி பார்க்காமல் படித்த, விவரம் அறிந்த வேட்பாளர்களை களத்தில் இறக்கியிருப்பதும் திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு நிச்சயம் பெரும் தலைவலியை ஏற்படுத்தும். இவர்களுக்கிடையே நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட சில கட்சிகளும் தங்கள் பங்கிற்கு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.
அதிமுகவும், திமுகவும் சரி பாதி தொகுதிகளுக்கு மேல்இந்த முறை போட்டியிடவில்லை. காரணம் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளன. ஆனால் கடந்த முறை ஜெயலலிதா தனித்துப் போட்டியிட்ட நாற்பதில்37 இடங்களில் வென்றதுடன், காங்கிரஸ், பாஜகவுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அதிமுகவை அமரச் செய்தார். இந்த முறை அப்படியொரு சூழல் அமைய திமுக, அதிமுக கட்சிகளுக்கு ஒருபோதும் வாய்ப்பில்லை என்பதுதான் கள யதார்த்தமாக இருக்கிறது.
மதுரை மக்களவைத்தொகுதியைப் பொறுத்தவரை, சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகளின் உரைகல்லாகவே இதுவரை பார்க்கப்பட்டுவருகிறது. இந்தத் தேர்தலிலும் அது தொடரவே அதிக வாய்ப்புள்ளது. காரணம், தேசிய கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளுக்கே அதிக முறை வெல்லும் வாய்ப்பைத் தந்திருக்கிறது. இதில் விதிவிலக்காக மாநிலக் கட்சிகளில் தமாகா சார்பாக ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஒருமுறையும், திமுக சார்பாக அழகிரி ஒருமுறையும், கடந்த முறை அதிமுக சார்பாக கோபாலகிருஷ்ணனும் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளனர்.
1952ஆம் ஆண்டிலிருந்து 2014 வரை நடைபெற்ற 16 தேர்தல்களில் எட்டு முறை காங்கிரசும், நான்கு முறை கம்யூனிஸ்ட் கட்சிகளும் திமுக, அதிமுக, ஜனதா, தமாகா ஆகியவை தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன. மதுரையில் வெற்றிபெறும் கட்சி அல்லது அதன் கூட்டணிதான் பெரும்பாலும் மத்தியில் ஆட்சியமைத்திருக்கின்றன என்பது அரசியல் நம்பிக்கைகளில் ஒன்று.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற 14ஆவது மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.மோகன் (நான்கு லட்சத்து 14 ஆயிரத்து 433 வாக்குகள்), தனக்கு அடுத்தபடியாக வந்த ஏ.கே.போஸைவிட (இரண்டு லட்சத்து 81 ஆயிரத்து 593 வாக்குகள்) ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 840 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற 15ஆவது மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மு.க.அழகிரி (நான்கு லட்சத்து 31 ஆயிரத்து 295 வாக்குகள்), தனக்கு அடுத்தபடியாக வந்த மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.மோகனை (இரண்டு லட்சத்து 90 ஆயிரத்து 310 வாக்குகள்) ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 985 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
திமுக, அதிமுக கட்சிகளுக்கு மதுரை மக்களவைத் தொகுதி இதுவரை கிடைத்ததில்லை என்ற நிலையை இந்தத் தேர்தல்தான் வியப்பிற்குரிய வகையில் மாற்றியது. இந்தத் தேர்தலில் 77.43 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
2014ஆம் ஆண்டு நடைபெற்ற 16ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக தனித்துக் களம்கண்டது. அதிமுக சார்பாக நிறுத்தப்பட்ட கோபாலகிருஷ்ணன் (நான்கு லட்சத்து 53 ஆயிரத்து 785 வாக்குகள்), தனக்கு அடுத்தபடியாக வந்த திமுகவின் பி.வேலுச்சாமியை (இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 361 வாக்குகள்) விட ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 424 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 67.74 விழுக்காடு வாக்குகள் இந்தத் தேர்தலில் பதிவாயின.
மேலூர், மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை மத்திய, மதுரை வடக்கு, சோழவந்தான், உசிலம்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம் என 10 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டமாக இருக்கிறது மதுரை.
இதில் மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மதுரை மத்திய ஆகிய ஆறு சட்டப்பேரவை தொகுதிகளை கொண்டது மதுரை மக்களவைத் தொகுதி (சோழவந்தான், உசிலம்பட்டி ஆகியவை தேனி மக்களவைத் தொகுதியிலும்திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகியவைவிருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள்ளும் வருகின்றன),
2019 ஜனவரி 31ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி மதுரை மக்களவைத் தொகுதி ஏழு லட்சத்து 50 ஆயிரத்து 321 ஆண் வாக்காளர்களையும், ஏழு லட்சத்து 70 ஆயிரத்து 328 பெண் வாக்காளர்களையும், 79 திருநங்கை வாக்காளர்களும்என மொத்தமாக 15 லட்சத்து 20 ஆயிரத்து 728 வாக்காளர்களையும் கொண்டதாகும்.
மதுரை மக்களவைத் தொகுதி தொழில் வளர்ச்சியில் மிகப் பின்தங்கியுள்ள ஒன்றாகும். பெரும்பாலும் மல்லிகை, காய்கறி, பழம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த தொழில்களே பிரதானமாகும். மல்லிகை நறுமண தொழிற்சாலை, காய்கறி மற்றும் கனி வகைகள் பதப்படுத்தும் கூடங்கள், பழங்களைக் கொண்டு ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் போன்ற தொழில் சார்ந்த வளர்ச்சியை மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர். இங்கு நிலவும் குடிநீர் சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வை எந்த அரசியல்வாதியும் இதுவரை வழங்கவில்லை.
தமிழ்நாட்டின் தென் மாவட்ட மக்களின் தலைநகராய்த் திகழும் மதுரையில் போதுமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யாரும் செய்யவில்லை என்பது பெரும் குறையாகச் சொல்கின்றனர். சுற்றுலா மேம்பாடு, போக்குவரத்து, குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படையான வசதிகளில் மதுரை இன்னமும் மேம்படவில்லை என்பதும் உண்மை.
வைகையாற்றை சீரமைப்போம் என்பது பெரும்பாலான கட்சிகளின் முக்கியமான உறுதிமொழியாக இருந்தபோதும்கூட இன்னமும் அதற்கான பணிகளில் தொய்வையே சந்திக்கிறது. அதேபோன்று வைகையில் எப்போதும் தண்ணீர் ஓடுவதற்கும், மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் நிரந்தர நீர் தேக்குவதற்கும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதும் மதுரை மக்களின் குற்றச்சாட்டாகும்.
தற்போதைய 17ஆவது மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை திமுகவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் நீண்ட கால உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். மரபுப் பெருமைக்குரிய மதுரையின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களை மதுரைக்குக் கொண்டு வருவேன் என்றும் கீழடியில் நிரந்தர அருங்காட்சியகம் அமைப்பேன் என்றும் உறுதியளித்துள்ளார்.
தமிழ், தமிழர் உரிமை, தமிழர் பண்பாடு, தொல்லியல் என்று சு.வெங்கடேசன் பேசினாலும் அவரது கட்சியின் நிலைப்பாடு வேறுவிதமாகவே உள்ளது என்பது நடுநிலையாளர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த சு.வெங்கடேசன், சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டபோது, ஜாதி காரணமாக 2011ஆம் ஆண்டு தோல்வியைத் தழுவினார்.
அதுமட்டுமன்றி, மதுரை மக்களின் பல்வேறு பிரச்னைகளில் மார்க்சிஸ்ட் கட்சி, களமிறங்கிப் போராடியுள்ள நிலையில், அதன் தற்போதைய வேட்பாளரான சு.வெங்கடேசன், அதுபோன்ற மக்கள் பிரச்னைகளில் எந்த அளவிற்கு அக்கட்சியின் சார்பாக துணை நின்றார் என்பதும், வெங்கடேசன் குறித்தான பிம்பம் என்பது கீழடி அகழாய்வு சார்ந்ததாக மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளதும் அவருக்குப் பாதகமான அம்சமாகும்.
அதேபோன்று அமமுக சார்பாக களமிறக்கப்பட்டுள்ள டேவிட் அண்ணாதுரை, தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் அவைத்தலைவர் காளிமுத்துவின் மகனாவார்; சிறந்த பேச்சாளர்; சட்டம் பயின்றவர். அதிமுக தொண்டர்களோடு மிகவும் நெருக்கம் காட்டியவர்.