தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அமராவதி கரையோரத்தில் நீர் திருட்டு: ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவு - Water theft case in Amravathi Riverside well

அமராவதி ஆற்றங்கரை ஓரத்தில் முறைகேடாக கிணறு அமைத்து நீரைத் திருடி விற்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் கரூர் ஆட்சியர் அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அமராவதி
அமராவதி

By

Published : Sep 17, 2021, 2:08 PM IST

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அதில், "அரவக்குறிச்சி வட்டம் சின்னதாராபுரம், ஆணைப்புதூர், கூடலூர் கிழக்கு ஆகிய கிராமங்களில் அரசின் அனுமதியின்றி அமராவதி ஆற்றினுள் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன.

இதனருகில் ஆழ்துளை போடப்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரத்தில் மின் மோட்டார் வைத்து கிணறுகளிலிருந்து பல ஆண்டுகளாக நீர் எடுக்கின்றனர். இவ்வாறாக எடுக்கப்படும் நீரை விற்பனை செய்துவருகின்றனர். இந்த மோசடி அரசு அலுவலர்களின் ஆதரவுடன் நடந்துவருகிறது.

இதனால், ஆற்றின் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. கரூர் நகரில் நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எனவே, முறைகேடாக நீர் எடுத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அமராவதி ஆற்றுக்குள் போடப்பட்டுள்ள கிணறுகளையும், பூமிக்குள் போடப்பட்டுள்ள வட்டக்கிணறுகளையும் அகற்றி இதற்கான மின் இணைப்பைத் துண்டிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வீ. பாரதிதாசன், ஜெ. நிஷாபானு ஆகியோர் அடங்கிய அமர்வு, கரூர் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் (டிஆர்ஓ), வருவாய் கோட்டாட்சியர் (ஆர்டிஓ), பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ஆகியோர் தரப்பில் அறிக்கை அளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 30ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: ஒவ்வொருவருக்கும் 1 கிலோ மீன்கள் இலவசம் - மோடி பிறந்த நாள் ஸ்பெஷல்!

ABOUT THE AUTHOR

...view details