தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அமைந்துள்ளது வைகை அணை. 71 அடி உயர நீர்த்தேக்க கொள்ளளவு கொண்ட இந்த அணையின் மூலம் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்ட மக்கள் குடிநீர், பாசன வசதி பெறுகின்றனர். மேகமலை வனப்பகுதியில் உள்ள மூலவைகை, முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரே வைகையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாகத் திகழ்கிறது.
பாசனப்பகுதிகளுக்காக தொடர் நீர்த்திறப்பு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து நின்று அணையின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து தற்போது 41.98 அடியாக உள்ளது. இருந்தபோதிலும் மதுரை மாநகர் உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக 72 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நேற்று (மே 24) காலை நிலவரப்படி அணையின் நீர் இருப்பு 1,115மி.கன அடியாக உள்ளது.
இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகிறது. இந்த கிணறுகளின் நீர்மட்டத்தை உயர்த்தும் வகையில் அணையில் இருந்து ஆற்றின் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என மதுரை மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று இன்று மாலை 6 மணி முதல் மூன்று நாட்களுக்கு மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
தொடர்ந்து மூன்று நாட்களில் மொத்தம் 216மி.கன அடி நீர் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்பட உள்ளது. அதன்படி, முதல்நாள் விநாடிக்கு 1,500 கன அடி வீதமும், இரண்டாவது நாளில் 850 கனஅடி தண்ணீரும், மூன்றாவது நாளில் 300 கன அடியாக குறைக்கப்பட்டு மே 28ஆம் தேதி காலை 6 மணிக்கு நிறுத்தப்பட உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கோடை காலத்தில் நீர்வரத்து இல்லாத நிலையில் திறக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.