மதுரை மாவட்டம் குருவித்துறை எனும் சிற்றூருக்கு அருகே வைகையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிற்றணை மகத்தான நீர் மேலாண்மையின் அழியாத் தடமாகத் திகழ்கிறது. இச்சிற்றணை கி.பி. 1117ஆம் ஆண்டு பாண்டிய மன்னன் ஜடாவர்ம ஸ்ரீவல்லபன் காலத்தில் கட்டப்பட்டது.வெறும் கற்களைக் கொண்டே உருவாக்கப்பட்ட இந்த அணை பாண்டியன் அணை என்ற பெயரால் தற்போது அழைக்கப்பட்டுவருகிறது.
இந்த அணை குறித்து ஆய்வுசெய்து வரும் பொறியியல் மாணவரும், சமூக செயல்பாட்டாளருமான யோகேஷ் கார்த்திக் கூறுகையில், "வடக்கு தெற்காக ஓடிவரும் வைகை, இந்த இடத்தில் தீடிரென கிழக்கு மேற்காகத் திரும்புகிறது. இதனால் வைகையாற்றின் மணல் விளைநிலங்களில் வாரியிறைக்கப்படும் அபாயத்தைத் தடுக்கவும் இங்கிருந்து ஒரு கால்வாய் அமைத்து 9 கி.மீ. தொலைவிலுள்ள தென்கரை பெரியகுளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லவும் இந்தத் தடுப்பணை பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்டது" என்கிறார்.
வைகையின் நேர் குறுக்காக இல்லாமல், சற்றே அரைவட்ட வடிவத்தில் அமைந்த இந்தத் தடுப்பணை, 500 மீட்டர் நீளமும் மூன்று மீட்டர் உயரமும் கொண்டதாகும். மணலை வடிகட்டி, தண்ணீர் வழக்கம்போல் ஆற்றில் வழிந்தோடும் வகையில் இந்த அணை உருவாக்கப்பட்டுள்ளது. அணையின் மேற்புறமாகச் செல்லும் தண்ணீர் கால்வாயில் ஓடுவதுடன் மீண்டும் ஆற்றுக்குள்ளே வழிந்தோடும் வகையில் மூன்று கண்களைக் கொண்ட மதகானது கருங்கற்களைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது.
மூத்தத் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறுகையில், "பாண்டிய மன்னனால் உருவாக்கப்பட்ட இந்தக் கால்வாயின் மேற்புறம், புதிதாக ஒரு கால்வாயை விவசாயி ஒருவர் வெட்டியிருந்துள்ளார். இப்பிரச்னை மன்னனின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. விசாரித்த பாண்டியன் ஏற்கனவே உள்ள காலுக்கு மேலாக மற்றொரு கால் வெட்டக்கூடாது என்று தீர்ப்பளிக்கிறார். 'காலுக்கு மேல் கால் கல்லலாகாது' என்ற அச்சட்டத்தின் கல்வெட்டு குருவித் துறை கோயில் கருவறை சுற்றுச்சுவரில் இன்றும் காணப்படுகிறது" என்கிறார்.